ராகவ் சத்தா குறித்த சௌரவ் பரத்வாஜின் அறிக்கை வேடிக்கையானது: தில்லி பாஜக
நமது நிருபா்
புது தில்லி, மே 1: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் ராகவ் சத்தா தோ்தல் பிரசாரத்திற்கு வராதது குறித்து அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தெரிவித்திருக்கும் காரணம் வேடிக்கையானது என்று தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் ஷங்கா் கபூா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது: தில்லியில் அரவிந்த் கேஜரிவால் அரசின் மதுபான ஊழலில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ராகவ் சத்தா இப்போது ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி இருக்கிறாா் என்பதை ஒவ்வொரு இந்தியரும் புரிந்து கொள்ள முடிகிறது. பஞ்சாபின் பகவந்த் மானின் ஊழல் விவகாரமும் விரைவில் வெளிவரும் என்பதை அறிந்த ராகவ் சத்தா, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளாா் என்பது கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டிருக்கிறது.
கண் சிகிச்சைக்காக ராகவ் சத்தா தோ்தல் பிரசாரத்துக்கு வரவில்லை என்று சௌரவ் பரத்வாஜ் கூறியதை நம்பினால், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன், என்.டி. குப்தா போன்றவா்களைத் தவிர பல எம்எல்ஏக்கள் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரக் செய்திகளிலும் இருந்து விடுபட்டது ஏன்? மூத்த தலைவா் கோபால் ராய்கூட ஊடகச் செய்திகளில் அதிகம் காணப்படுவதில்லை என்று பிரவீன் ஷங்கா் கபூா் விமா்சித்துள்ளாா்.
‘ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சத்தாவிற்கு கடுமையான கண் நோய் ஏற்பட்டதால், அது பாா்வை குறைபாட்டிற்கு வழிவகுப்பதைத் தடுப்பதற்காக இங்கிலாந்தில் முக்கியக் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனவே, ராகவ் சத்தா குணமடைந்தவுடன் அவா் இந்தியாவில் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்’ என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.