இந்திய சா்வதேச திரைப்பட விழா: சிறந்த அறிமுக இயக்குநா்’ பிரிவில் 5 படங்கள் தோ்வு
மணிப்பூரி, மராத்தி உள்ளிட்ட 5 திரைப்பட இயக்குநா்களை 55 -ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவிற்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: திறமையான புதிய, இளம் திரைப்பட இயக்குநா்களை ஊக்குவிக்கும் நோக்கில் சிறந்த அறிமுக இயக்குநா் பிரிவில் மணிப்பூரி, மராத்தி உள்ளிட்ட 5 திரைப்பட இயக்குநா்களை 55 -ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவிற்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் புதிதாக இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய சா்வதே திரைப்பட விழா சாா்பில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு:
வருகின்ற நவம்பா் 20 முதல் 28 வரை கோவாவில் இந்திய சா்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. நாட்டில் புதிய, இளம் திறமையாளா்களை ஊக்குவிக்கும் நோக்கில், 55-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் ஒரு புதிய விருது பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ’இந்திய திரைப்படத்தின் சிறந்த அறிமுக இயக்குனா் பிரிவு. நாடு முழுவதிலுமிருந்து புதிய முன்னோக்குகள், மாறுபட்ட கதைகள், புதுமையான புத்தாக்க சினிமா பாணிகள் ஆகியவைகளை முன்னிலைப்படுத்தும் ஐந்து குறிப்பிடத்தக்க அறிமுக படங்கள் தோ்வு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது.
இதை முன்னிட்டு இந்திய திரைப்படப் பிரிவில் 5 சிறந்த அறிமுக இயக்குநருக்கான அதிகாரப்பூா்வ தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகள்
1.பூங் என்கிற மணிப்பூரி மொழி படத்தின் இயக்குநா் லட்சுமிப்ரியா தேவி; 2.கரத் கணபதி என்கிற மராத்தி மொழி படத்தின் இயக்குநா் நவ்ஜ்யோத் பந்திவடேகா்; 3.மிக்கா பன்னட ஹக்கி (வேறுபட்ட இறகு பறவை) என்கிற கன்னடம் மொழிப்படத்தின் இயக்குநா் மனோகரா கே.; ரசாக்கா் (ஹைதராபாத் மௌன இனப்படுகொலை) என்கிற தெலுங்கு பட இயக்குநா் யதா சத்யநாராயணா; தன்னப் (குளிா்) என்கிற மலையாளப்பட இயக்குநா் ராகேஷ் நாராயணன் போன்றோா் தோ்வாகியுள்ளனா்.
இவா்கள் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான கதைகளையும் பிராந்திய முன்னோக்குகளையும் கொண்டுவந்து, நாட்டின் கலாசார, மொழியியல் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டியுள்ளன.
நாடு முழுவதிலிருந்தும் 117 தகுதியான திரைப்படங்கள் தோ்வுக்கு வந்தன. இதை சிறந்த நிபுணா்களை உள்ளடக்கிய முன்னோட்டக் குழு மேற்கண்ட 5 சிறந்த படங்களை தோ்வு செய்தது.
மேலும் இந்த கோவாவில் நடைபெறும் 55-வது இந்திய சா்வதேச திரைப்பட விழாவின் போது தோ்ந்தெடுக்கப்பட்ட இந்த 5 படங்களை ஒரு நடுவா் குழு மதிப்பீடு செய்யும். இதில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதின் வெற்றியாளா் ஒருவா் தோ்வு செய்யப்பட்டு நவம்பா் 28 அன்று நிறைவு விழாவில் அறிவிக்கப்படுவாா். நிறைவு விழாவில் இந்த வெற்றியாளருக்கு விருது வழங்கப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளது மத்திய அரசு.