பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிமுக இயக்குநரின் படம் தேர்வாகியிருப்பது பற்றி...
ஜெர்மனியில் நடைபெறும் 76 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் (Forum) பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிமுக இயக்குநர் இரா. கௌதம் இயக்கிய “சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்” (Members of the problematic Family - மெம்பர்ஸ் ஆஃப் தி ப்ராபளமேட்டிக் பேமிலி) என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இயக்குநரின் முதல் படமே பெர்லின் திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியிருப்பது இதுவே முதல்முறை. அலைபாயுதே, பருத்திவீரன், கொட்டுக்காளி ஆகிய தமிழ்ப் படங்களுக்கு அடுத்து இந்தப் பிரிவில் தேர்வாகும் நான்காவது திரைப்படம் இது.
இந்தப் படத்தை தமிழரசன் காளிதாஸின் லேப்ரிந்த் நரேடிவ்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் “கூழாங்கல்” படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் கறுத்தடையான் மற்றும் கூத்துப்பட்டறைக் கலைஞர் ஆ.ரா. அஜித்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இவர்களுடன் அறிமுக நடிகர்களான காஞ்சனா செந்தில், டி. பன்னீர்செல்வம், சரவண சித்தார்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சித்தார்த் கதிர் பணியாற்றியுள்ளார். கணேஷ் நந்தகுமார் பாண்டியராஜூ படத்தொகுப்பு மற்றும் ஒலிக்கலவைப் பணிகளைச் செய்துள்ளார். அலெக்சாண்டர் தமிழ்த்தம்பி கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
இந்தத் திரைப்படம் குறித்து பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில், “ஒரு இளைஞன் சிறுவயதில் இறந்துவிடுகிறான். அனைவரின் இயல்பு வாழ்க்கையையும் உலுக்கும் மரணமாக அது அமைகிறது. இறுதிச் சடங்கு நடக்கும்போதும், அதில் பெருமளவில் துக்கம் நிலவவில்லை, மாறாக குடும்ப உறுப்பினர்களின் வன்முறையே தென்படுகிறது. ஓர் அறிமுக இயக்குநரின் அருமையான முயற்சி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பெர்லின் சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.