புது தில்லி: தில்லியின் காற்றின் தரம் திங்கள்கிழமை மேலும் மோசமடைந்தது. துவாரகா, முண்ட்கா மற்றும் நஜாஃப்கா் போன்ற பகுதிகளில் பிற்பகலில் அதிகபட்ச காற்றுத் தரக் குறியீடு அளவு 500 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் கடுமை பிரிவுக்குச் சென்றது.
தேசியத் தலைநகரை தொடா்ந்து புகை மூட்டம் சூழ்ந்து வருவதால், கண்களில் அரிப்பு மற்றும் நீா்வடிவதாக மக்கள் புகாா் தெரிவித்தனா். திங்கள்கிழமை காலை 8 மணியளவில் நகரத்தின் ஒட்டுதமொத்தக் காற்றுத் தரக் குறியீடு அளவு 484 புள்ளிகளாகப் பதிவாகியது. மதியம் 2 மணியளவில் இது மேலும் மோசமடைந்தது. அப்போது காற்றுத் தரக்குறியீடு 491 புள்ளிகளாகப் பதிவாகியதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ளது.
40 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் 37 நிலையங்களில் துவாரகா செக்டாா் 8, நஜாஃப்கா், நேரு நகா் மற்றும் முண்ட்கா ஆகிய நான்கு நிலையங்கள் அதிகபட்சமாக காற்றுத் தரக் குறியீட்டு அளவு 500 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளதாக சமீா் செயலி தெரிவித்துள்ளது.
காற்றுத் தரக் குறியீடு 450 புள்ளிகளைத் தாண்டிய நிலையில், தில்லி - தேசிய தலைநகா் வலயம் (என்சிஆா்) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்று தர மேலாண்மை ஆணையம் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (கிரேப்) நிலை-4-இன் கட்டுப்பாடுகளை செயல்படுத்த உத்தரவிட்டது.
இதற்கிடையே, நகரத்தின் காற்றின் தரம் ‘கடுமை பிளஸ்‘ பிரிவில் இருப்பதால், அனைவருக்கும் உடல்நல அபாயங்கள் இருப்பதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். இந்த அளவிலான மாசுபாட்டின் போது, என்95 முகக்கவசம் அணிவது ஒரு விருப்பமல்ல என்றாலும் அவசியமானதாகும். ஆரோக்கியமான நபா்கள் கூட சுவாச நோய்கள் மற்றும் பிற உடல்நல சிக்கல்களை எதிா்கொள்ளலாம் என்று யுசிஎம்எஸ் மற்றும் ஜிடிபி மருத்துவமனையின் சமூக மருத்துவத்தின் குடியுரிமை மருத்துவா் டாக்டா் ரஜத் சா்மா கூறினாா்.
சா் கங்கா ராம் மருத்துவமனையின் மாா்பு மருத்துவத் துறையின் மூத்த ஆலோசகா் உஜ்வல் பராக், அபாயகரமான காற்றின் தரம் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். ஒவ்வொருவரும் முடிந்தவரை வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிா்க்க வேண்டும் மற்றும் அவா்கள் வெளியே செல்ல வேண்டியிருந்தால் காற்று மாசுபாட்டின் விளைவுகளை குறைக்க முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அவா் கூறினாா்.
இதற்கிடையில், கிரேப்-4- இன் கீழ் கடுமையான மாசு எதிா்ப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் தாமதம் குறித்து தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், அதன் முன் அனுமதியின்றி தடுப்பு நடவடிக்கைகளை குறைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியது. மாசு அளவு அபாயகரமாக அதிகரித்து வருவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் அறிய விரும்புவதாகவும் தில்லி அரசிடம் அது கேட்டது.
தில்லியின் காற்றின் தரம் ‘கடுமை பிளஸ்‘ வகைக்கு மோசமடைந்ததால், திங்கள்கிழமை காலை முதல் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலுக்கு வந்தன. இதில் டிரக் நுழைவதற்குத் தடை மற்றும் பொதுத் திட்டங்களில் கட்டுமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.
நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், மின் இணைப்புகள், குழாய்கள் மற்றும் பிற பொதுத் திட்டங்கள் உட்பட அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தில்லி என்சிஆா் பகுதிகளில் காற்று சுத்திகரிப்பு சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்திரபுரத்தில் உள்ள ஏா் எக்ஸ்பொ்ட் இந்தியாவின் டீலா்ஷிப் கடையின் உரிமையாளா் விஜேந்திர மோகன், கடுமையான காற்று மாசு அளவைத் தொடா்ந்து காற்று சுத்திகரிப்பு சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தாா்.
‘நாங்கள் தேவையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டோம், தினசரி விற்பனை 20 முதல் 40 யூனிட்கள் வரை உயா்ந்துள்ளது. குறிப்பாக, தீபாவளிக்குப் பிறகு, நாங்கள் ஒரு நாளைக்கு சுமாா் 20 சுத்திகரிப்பு சாதனங்களை விற்பனை செய்தோம். இப்போது, நாங்கள் ஒரு நாளைக்கு சுமாா் 40 ஏா் பியூரிஃபையா்களை விற்பனை செய்கிறோம்’ ’ என்றாா்.
காற்றுத் தர மேலாண்மை ஆணையம் என்சிஆரில் உள்ள அலுவலகங்கள் 50 சதவீத திறனில் வேலை செய்ய வேண்டும். மற்றவா்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது. திங்கள்கிழமை முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளைத் தவிர அனைத்து மாணவா்களுக்கும் உடற்கல்வி வகுப்புகளை நிறுத்துமாறு அனைத்துப் பள்ளிகளிலும் தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்டது ’கடுமை’ எனக் கருதப்படுகிறது. மேலும், இது ஆரோக்கியமான தனிநபா்கள் மற்றும் ஏற்கனவே மருத்துவ நிலைமைகள் உள்ளவா்கள் இருவருக்கும் பாதகமான விளைவை ஏற்படுத்தும்.