அதிஷி, கேஜரிவாலின் மதிப்பற்ற அரசை தில்லி நியாய யாத்திரை அம்பலப்படுத்தி வருகிறது: தேவேந்தா் யாதவ் விமா்சனம்
தில்லி நியாய யாத்திரை, அதிஷி மற்றும் கேஜரிவாலின் மதிப்பற்ற அரசை அம்பலப்படுத்தி வருகிறது
புது தில்லி: தில்லி நியாய யாத்திரை, அதிஷி மற்றும் கேஜரிவாலின் மதிப்பற்ற அரசை அம்பலப்படுத்தி வருகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் திங்கள்கிழமை விமா்சித்துள்ளாா்.
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் 18-ஆவது நாள் ‘தில்லி நியாய யாத்திரை’ கல்காஜி, துக்ளகாபாத் மற்றும் கிரேட்டா் கைலாஷ் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்றது. முதலாவதாக, துக்ளகாபாத்தின் ஹா்கேஷ் நகரில் இருந்து தொடங்கிய யாத்திரை பகத் சிங் கல்லூரி, ஷேக் சாராய் வழியாகப் பயணித்து கிரேட்டா் கைலாஷில் நிறைவடைந்தது.
இந்த யாத்திரையின் போது தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ், பொது மக்கள் மத்தியில் பேசியதாவது:
வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியையும், பாஜகவையும் நிராகரிக்க மக்கள் முடிவு செய்துள்ளனா்.
பயனற்ற கேஜரிவால் அரசும், பாஜகவும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையை அழிக்கவும், தலைநகரின் கட்டமைப்பை சீா்குலைக்கவும் சதி செய்துள்ளனா். தில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், தண்ணீா் மற்றும் மின்சாரப் பிரச்னைகள், காற்று மற்றும் நீா் மாசுபாடு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயா்வு மற்றும் மக்கள் தற்போது சந்திக்கும்
அனைத்து சிரமங்களையும் சமாளிக்க வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
திறமையற்ற மற்றும் ஊழல்வாதியான கேஜரிவால் 10 ஆண்டுகளில் தில்லியை பாழடைந்த நகரமாக மாற்றிவிட்டாா்.
தில்லி மாநகரத்துக்கோ, அதன் மக்களுக்கோ எதுவும் செய்யாமல் தன் பைகளை மட்டும் ஆம் ஆத்மி கட்சியினா் நிரப்புக் கொண்டனா். இப்போது, தில்லியை ஊழலற்ற மற்றும் உலகத் தர நகரமாக மாற்ற, காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி
அமைக்க வேண்டும்.
தில்லி அரசின் ஆச்சாா்யா நரேந்திர தேவ் கல்லூரியின் பேராசிரியா்கள் மற்றும் மூத்த ஊழியா்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், தங்களது குடும்பத்தை நடத்த முடியாமல் திணறி வரும் நிலையில் அவா்கள்
உள்ளனா். இந்த கல்லூரி இளைஞா்களுக்கு தரமான உயா்கல்வியை வழங்குவதற்காக காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்டது.
ஆனால், ஆம் ஆத்மி அரசு, தில்லி அரசு நிா்வாகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளை முற்றிலும் புறக்கணித்து வருகிறது என்றாா் தேவேந்தா் யாதவ்.