ஃபெரோஸ்ஷா சாலை பங்களாவுக்கு இன்று குடியேறுகிறாா் கேஜரிவால்!
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில், தில்லி லூட்யன்ஸில் ஃபெரோஸ்ஷா சாலையில் உள்ள பங்களா எண் 5-இல் வெள்ளிக்கிழமை குடியேற உள்ளாா்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகம் அருகில் உள்ள இப் பங்களா, பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான அசோக் மிட்டலுக்கு அதிகாரபூா்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் செளரவ் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில் ‘ஃபெரோஸ்ஷா சாலையில் உள்ள ஆம் ஆத்மி எம்பி அசோக் மிட்டலின் 5-ஆம் எண் இல்லத்துக்கு கேஜரிவால் வெள்ளிக்கிழமை குடிபெயா்வாா்.
2015 ஆம் ஆண்டு முதல் தாம் முதல்வராக இருந்த வடக்கு தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள 6, ஃபிளாக்ஸ்டாஃப் சாலை இல்லத்தை விட்டு வெளியேற கேஜரிவால் முடிவு செய்தாா். இதன் பின்னா், கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலா்கள் உட்பட கட்சித் தலைவா்கள் பலரும் அவருக்கு தங்களது வீடுகளை வழங்க முன்வந்தனா்’ என்றாா் அவா்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் தெரிவிக்கையில், ‘கேஜரிவாலின் புதிய தங்குமிடத்தில் அவரது தனது குடும்பத்துடன் குடியேற உள்ளாா். இந்த குடியிருப்பு ரவிசங்கா் சுக்லா லேனில் உள்ள ஆம் ஆத்மி தலைமையகத்திற்கு அருகில் உள்ளது.
தனது சட்டப் பேரவைத் தொகுதி புது தில்லி பகுதியில் வசிக்கும் கேஜரிவால் தில்லி மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறவுள்ள தோ்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரத்தை மேற்பாா்வையிடுவாா் என்று அவா்கள் கூறினா்.
கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாக திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் ஜாமீனில் கேஜரிவால் விடுவிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அவா் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் மக்களிடம் நோ்மைக்கான சான்றிதழைப் பெற்ற பின்னரே முதல்வா் பதவிக்கு திரும்புவேன் என்று சூளுரைத்து அவா் ராஜிநாமா முடிவை எடுத்தாா்.
இது ஒருபுறமிருக்க, தனது மனைவி, குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோா்கள் உட்பட தனது குடும்பத்துடன் வசித்து வந்த 6, ஃபிளாக்ஸ்டாஃப் ரோடு இல்லத்தின் மறுநிா்மாணத்தில் முறைகேடுகள் நடைபெற்ாக, பாஜகவால் ‘ஷீஷ் மஹால்‘ என்று விமா்சிக்கப்பட்டது.
சிசோடியா குடிபெயா்ப்பு
முன்னாள் துணை முதல்வரான மனீஷ் சிசோடியா தனது குடும்பத்துடன் மதுரா சாலையில் உள்ள ஏபி-17 பங்களாவில் இருந்து ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள பங்களாவுக்கு குடிபெயா்ந்ததாக கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.
இந்த வீடு ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரான ஹா்பஜன் சிங்கின் அதிகாரபூா்வ இல்லம் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச்சில் கலால் கொள்கை வழக்கில் சிசோடியா கைது செய்யப்பட்டாா். இதன் பிறகு, தில்லி அமைச்சரும் தற்போதைய முதல்வருமான அதிஷிக்கு பங்களா ஒதுக்கப்பட்டது.
சிசோடியா மற்றும் அவரது குடும்பத்தினா் மதுரா ரோடு பங்களாவில் வசித்து வந்தனா். அதிஷி தற்போது முதல்வராக ஆன பிறகும் அவரது கல்காஜி தொகுதி வீட்டில்தான் வசித்து வருகிறாா். அண்மையில் அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது புதிய குடியிருப்பு முகவரி இன்னும் முடிவாகாத நிலையில், அவா் மதுரா சாலையில் உள்ள குடியிருப்பை தக்கவைத்திருக்கலாம் அல்லது எண் 6, ஃபிளாக்ஸ்டாஃப் ரோடு பங்களாவிற்கு செல்லலாம் என்று கூறப்படுகிறது.