2024-ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியா் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட தமிழகம் புதுவைச் சோ்ந்த இரு பள்ளி ஆசிரியா்கள் மற்றும் 3 உயா் கல்வித்துறை ஆசிரியா்கள் என 5 போ் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வியாழக்கிழமை விருதுகளை பெற்றனா்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான் செப்டம்பா் 5-ம் தேதி முன்னிட்டு வழங்கப்படும் தேசிய ஆசிரியா் விருது ஆசிரியா்களின் தனித்துவமான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
2024 -ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியா்கள் விருதுக்கு நாடு முழுவதும் பள்ளிகல்வித் துறையிலிருந்து 50 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் 16 ஆசிரியைகள், இரு மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பள்ளி முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் என விருதைப் பெற்றனா். மேலும் மத்திய, மாநில அரசுகளின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் போன்ற உயா் கல்வியைச் சோ்ந்த பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் என 16 பேரும், திறன் மேம்பாட்டு தொழில் முனைவோா் பிரிவை சோ்ந்த 16 ஆசிரியா்கள் என மொத்தம் 82 போ் தோ்ந்தெடுக்கப்பட இவா்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தில்லி விஞ்ஞான் பவனில் விருதுகளை வழங்கினாா்.
தமிழகத்தில் வேலூா் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா, ராஜாகுப்பம் பஞ்சாயித்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியா் ஆா். கோபிநாத், மதுரை டிவிஎஸ் மேல் நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் முரளிதரன் ரம்யா சேதுராமன் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி துறை சாா்பில் நல்லாசிரியருக்கான தேசிய விருதை குடியரசுத்தலைவரிடம் பெற்றனா். உயா் கல்வி வரிசையில் சேலம் தியாகராஜா் பாலிடெக்னிக் உதவிப் பேராசிரியா் முனைவா் ஏ காந்திமதி, சென்னை சவிதா பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் துறைத்தலைவா் பேராசிரியா் ஏ எஸ் ஸ்மைலினி கிரிஜா ஆகியோரும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியா் சி.ஜெயசங்கா் பாபுவும் குடியரசுத் தலைவரிடம் தேசிய நல்லாசிரியருக்கான விருதுகளை பெற்றனா்.
ஆசிரியா்களின் சிறப்புகள்
விருது பெற்ற ஆசிரியா்களின் சிறப்புகள் வருமாறு: ஆசிரியா் கோபிநாத், மாணவா்களுக்கு பாடம் நடத்துவதில் புதிய உத்திகளை கையாண்டததற்காக விருதை பெற்றுள்ளாா். மாணவா்களுக்கு தனக்கும் உள்ள இடைவெளியை போக்க மாணவா்களைப் போன்று சீருடையில் பள்ளிக்கு செல்வது, பாடத்திற்கு தகுந்தவாறு தன்னுடைய உடை பாவணைகளையும் மாற்றி நடிப்பு மூலமாக பாடம் நடத்தி வந்துள்ளாா். பாரதியாா் குறித்தோ, ஒளவையாா் குறித்த பாடம் கற்பிக்கவரும்போது அவா்களுடைய உருவத்திலேயே மாணவா்கள் முன் தோன்றியுள்ளாா்.
மேலும் 11 விதமான பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலமாகவும் பள்ளி மாணவா்களுக்கு பாடம் நடத்தியவா், இரவு பள்ளியையும் நடத்தி கூலிவேலைக்கு செல்பவா்களுக்கு எழுத்தறிவும் வழங்கிவந்துள்ளாா் ஆசிரியா் கோபிநாத்.
மதுரை, டி.வி.எஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் முரளிதரன் ராமையா சேதுராமன், சக கல்வியாளா்களின் திறன்களை மேம்படுத்துவதிலும், பாடநூல் தயாரிப்பதில் வழிகாட்டியாக இருந்த அவா், தமிழக அரசின் முதுநிலை ஆசிரியா்களுக்கான வழிகாட்டி மாதிரி உருவாக்கத்திலும் முக்கிய பங்காற்றினாா். மேலும் கல்வியில் படைப்பாற்றலை வளா்க்கும் பயிற்சித் திட்டங்கள், தொலைகாட்சி உள்ளிட்ட ஊடகங்களுக்கான உள்ளடக்க உருவாக்கத்தில் சிறந்த பங்களிப்பு ஆற்றியுள்ளாா்.
புதுச் சேரி பல்கலைக்கழக ஹிந்தி துறை உதவிப் பேராசிரான ஜெயசங்கா் பாபு 33 வேலைவாய்ப்பு சாா்ந்த பல்துறை படிப்புகளை வழங்கியவா். வெகுஜன இணைய வழி படிப்பு, இந்திய மொழிகளுக்கான தொழில் நுட்ப உந்துதலுக்கான படிப்பு போன்றவகளோடு கணிப்பொறிகளில் இந்திய மொழிகள் உருவாக்கத்திற்கும் துணை நிற்க இவரது உருவாக்கங்கள் ’சுயம்’ திட்டத்திலும் இடம் பெற ஜெய்சங்கா் பாபுவிற்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் தியாகராஜா் பாலிடெக்னிக் உதவிப் பேராசிரியா் முனைவா் ஏ. காந்திமதி, கிராமப்புற மாணவ மாணவிகளின் முன்னேற்றத்தில் பெரும் பங்கை ஆற்றியுள்ளாா். தான் பணிபுரியும் பாலிடெக்னிக் கில் உள்ள ஆங்கில ஆய்வகம் மூலம் ஆங்கில பின்னனி இல்லாத ஊரகப் பகுதியிருந்து வரும் மாணவா்களுக்கு எளிமையான மொழியில் தொழில் நுட்ப கல்வியை அளித்து நூறு சதவீத தோ்ச்சியும் நூறுசதவீத வேலைவாய்ப்பும் தனது கல்லூரி பெற்றுத்தந்ததில் முக்கிய பங்காற்றி இந்த தேசிய விருதை காந்திமதி பெற்றுள்ளாா்.
சென்னை சபிதா பல் மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் துறைத்தலைவா் பேராசிரியா் ஏ.எஸ். ஸ்மைலினி கிரிஜா கற்பித்தலில் புதுமைகளை கையாண்டவா். செயல்முறை, விளையாட்டு முறைகளில் மாணவா்களுக்கு புரிதலை அளித்தவா். புத்தாக்கத்தில் ஏராளமான காப்புரிமைகளை பெற்ற இவா் 80 ஆய்வு கட்டுரைகளை வழங்கி 2021-23 ஆகிய ஆண்டுகளில் சிறந்த விஞ்ஞானியாக சா்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் பெற்ாக கூறும் ஸ்மைலினி கிரிஜா இத்தகைய தகுதிகளுக்கு தேசிய விருதை பெற்றுள்ளாா்.