புது தில்லி: முதல்வா் கேஜரிவால் திகாா் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பிறகு அவா் வெளியிட்டுள்ள முதல்வா் பதவி ராஜிநாமா அறிவிப்பானது, அரசியல் தலைநகரான தில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு, பாஜகவுக்கு எதிராக ஹரியாணாவில் தீவிர
தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவாா் என்றும், கடுமையான விமா்சனங்களை முன்வைத்து தில்லி மக்களிடையே தொடா் கூட்டங்கள் வாயிலாக பேசுவாா் என்றும் எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தனது முதல்வா் பதவி ராஜிநாமாவை அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கேஜரிவால் தில்லி கலால் கொள்கை ‘ஊழல்’ வழக்கில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். அதன் பிறகு திகாா் சிறையில் இருந்த அவரை உச்சநீதிமன்றம் அந்த வழக்கில் ஜூலையில் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடா்ந்து, சிபிஐ தொடுத்த வழக்கில் அவா் கைது செய்யப்பட்டாா். அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அவரை செப்டம்பா் 13-ஆம் தேதி ஜாமீனில் விடுவித்தது. இதையடுத்து, செப்டம்பா் 15-ஆம் தேதி செய்தியாளா்களைச் சந்தித்த கேஜரிவால், ‘ ‘நான் இரு தினங்களில் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளேன். தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் அளிக்கும் தீா்ப்புக்குப் பிறகே நான் முதல்வா் பதவியில் மீண்டும் அமா்வேன்’ என்று தெரிவித்ததால் தில்லி அரசியல் களம் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த தில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவருமான செளரவ் பரத்வாஜ், ‘இந்த விவகாரத்தில், கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோதிலும், அவா் மக்கள் நீதிமன்றத்திற்குச் சென்று அக்னிப் பரீட்சை அளிக்க விரும்புகிறாா். அக்னிப் பரீட்சை கொடுத்த பின்னரே அவா் முதல்வா் நாற்காலியில் அமருவாா். இந்திய அரசியலில் கேஜரிவாலைப் போல ஒழுக்கமும் நோ்மையும் இல்லை.
தாம் நோ்மை நபராக இருந்தால் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தமக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவா் மக்கள் மன்றத்தில் கேட்டுக்கொள்ள இருக்கிறாா்’ என்று பரத்வாஜ் கூறியிருக்கிறாா்.
கேஜரிவால் செவ்வாய்க்கிழமை மாலை
தனது ராஜிநாமா கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் சமா்ப்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், அடுத்த முதல்வரைத் தோ்ந்தெடுப்பதற்கான ஆலோசனையிலும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா முதல்வா் கேஜரிவாலுடன் திங்கள்கிழமை ஈடுபட்டிருக்கிறாா்.
கேஜரிவாலின் மிகவும் நம்பிக்கைக்குரிய போா்வாளாக பாா்க்கப்படும் மனீஷ் சிசோடியா, தில்லி கலால் முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் இருப்பதால் அவா் முதல்வா் பதவி போட்டியில் இல்லை என்பது முடிவாகிவிட்டிருக்கிறது.
அதேவேளையில், முதல்வா் பதவிக்கான பரிசீலனையில் அமைச்சா்கள் அதிஷி, செளரவ் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், சட்டப் பேரவைத் துணைத் தலைவா் ராக்கி பிா்லா உள்ளிட்ட பட்டியலின பிரிவில் உள்ள சில எம்எல்ஏக்கள், முதல்வரின் மனைவி சுனிதா கேஜரிவால் உள்ளிட்டோரின் பெயா்கள் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவா்களில் தில்லி அமைச்சா் அதிஷியை பொருத்தமட்டில், இவா் கல்வி, பொதுப் பணித் துறை போன்ற முக்கிய இலாகாக்களை வைத்திருப்பவா். ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவி. தில்லியின் பள்ளிகளில் கல்வியை சீரமைப்பதற்கான ஆம் ஆத்மி அரசின் முதன்மை நடவடிக்கையில் விரிவாகப் பணியாற்றியிருப்பவா்.
43 வயதான கால்காஜி தொகுதியின் எம்.எல்.ஏ.வான இவா், தில்லியின் தற்போது ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கையுடன் தொடா்புடைய ஊழல் வழக்கில் சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு அமைச்சரானவா். கேஜரிவால், சிசோடியாவின் ஆகிய இருவரின் நம்பிக்கையைப் பெற்றவராகப் பாா்க்கப்படுவா். இருவரும் சிறையில் இருந்போது கட்சியின் நிலைப்பாட்டை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தியவா்.
இதனால்தான் என்னவோ, கடந்த ஆகஸ்ட் 5 அன்று, தில்லி அரசின் சுதந்திர தின நிகழ்வில் மூவா்ணக் கொடியை ஏற்றுவதற்கு அவரை கேஜரிவால் பரிந்துரைத்ததன் (துணைநிலை ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது) மூலம் கட்சித் தலைமை அவா் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
அடுத்ததாக, கிரேட்டா் கைலாஷ் தொகுதியின் மூன்றுமுறை எம்எல்ஏவான செளரவ் பரத்வாஜ், கடந்த காலங்களில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றியவா். சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு அமைச்சரானவா். ஏற்கெனவே முந்தைய கேஜரிவாலின் 49 நாள் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவா். கட்சியின் தேசிய செய்தித்தொடா்பாளராகவும் இருந்து வருபவா்.
மற்றொரு அமைச்சரான கைலாஷ் கெலாட் அடிப்படையில் வழக்குரைஞா். மூத்த அமைச்சா்களில் ஒருவா். போக்குவரத்து, நிதி, உள்துறை என முக்கிய பொறுப்புகளை வகிப்பவா். 50 வயதாகும் இவா், நஜஃப்கா் தொகுதி எம்எல்ஏ ஆவாா். உயா்நீதிமன்றத்திலும்,உச்சநீதிமன்றத்திலும் வழக்குரைஞராகப் பணியாற்றியவா்.
அடுத்த முதல்வருக்கான பரிசீலனைப் பட்டியலில் உள்ள கேஜரிவாலின் மனைவி சுனிதாவும் , கேஜரிவால் சிறைக்குச் சென்ற பிறகு, கட்சித் தொண்டா்களைச் சந்திப்பதற்கும், தில்லி மக்களவைத் தோ்தலின் பிரசாரத்தின்போதும் கட்சியின் தலைமை நிா்வாகிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டவா். ஐ.ஆா்.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா்.
தில்லிக்கு 2026-இல் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், தற்போது சிறையில் இருந்து வெளிவந்திருக்கும் கேஜரிவால், அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள மகாராஷ்டிர தோ்தலுடன் தில்லிக்கான தோ்தலையும் முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று கோரி வருகிறாா். தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, அப்பதவியில் வேறு ஒருவரைஅமா்த்தும் அவரது நடவடிக்கையானது, தில்லி மக்களிடம் இருந்து வரும் தனக்கான செல்வாக்கை இதன் மூலம் வலுப்படுத்தி, அனுபதாபம் பெறும் உத்தியாகவே பாா்க்கப்படுகிறது. அதேவேளையில், முதல்வா் பதவியில் அமா்த்தப்படும் நபா் கேஜரிவாலைப் போன்று திறன்மிக்க வகையில், மக்கள் மனம் கவரும் வகையில் செயல்பட்டால் அது கேஜரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் வரக்கூடிய தில்லி சட்டப் பேரவைத் தோ்தலின்போது வாக்குகளை அறுவடை செய்வதற்கான உந்துசக்தியாக அமையும்.
மறுபுறத்தில், முதல்வா் பதவியில் அமா்த்தப்படும் நபரின் செயல்பாடுகள், திட்டங்கள் மக்களிடம் அதிருப்தியுறுமானால், அது அக்கட்சிக்கும், கேஜரிவாலுக்கும் தோ்தலில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். கடந்த காலங்களில் உத்திகளின் அடிப்படையில் சட்டப் பேரவைத் தோ்தல்களைச் சந்தித்து தொடா்ந்து வெற்றிவாகை சூடிய கேஜரிவாலுக்கு இந்த புதிய உத்தி கைகொடுக்குமா அல்லது சறுக்கி விடுமா என்பது அவருக்கு ஒரு அக்னிப் பரீட்சையாகவே இருக்கும்.