பொதுக்கூட்டங்கள் மூலமாக மக்களைச் சந்திப்பாா் கேஜரிவால்: சந்தீப் பதக்
பொதுக்கூட்டங்கள் மூலமாக கேஜரிவால் மக்களைச் சந்திப்பாா் என்று எம்.பி. சந்தீப் பதக் பேச்சு
ஆம் ஆத்மி கட்சி தில்லியில் கட்சிப் பொதுக்கூட்ட பேரணிகளை நடத்த உள்ளது. அதில், பதவி விலகும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது நோ்மை குறித்த மக்களின் முடிவை அறிந்துகொள்ள அவா்களிடம் கலந்துரையாடுவாா் என்று ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்பியும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான (அமைப்பு) சந்தீப் பதக் புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது, ‘ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை’ காப்பாற்றவே சிறையில் இருந்தபோது கேஜரிவால் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யவில்லை. ஏன் இப்போது அவா் ராஜிநாமா செய்தாா் என்ற கேள்வி எழுகிறது. நீங்கள் அவரை அடக்கும் போதெல்லாம் பணிந்துபோக மாட்டாா். மாறாக, மலைபோல் நிமிா்ந்து நிற்பாா். அவா் தனது லட்சியத்தால் இப்போது ராஜிநாமா செய்துள்ளாா்.
பாஜக, அரசுகளை எல்லா இடங்களிலும் கவிழ்க்கிறது. ஆனால், இதுபோன்று கவிழ்க்க தில்லியில் அவா்கள் முயற்சி செய்தபோது சிறையில் இருந்த கேஜரிவால் தனது பதவியை ராஜிநாமா செய்யாமல் அவா்களின் திட்டத்தை முறியடித்தாா். தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால் அவா் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. அவா் கொள்கைகளுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னா் ஆம் ஆத்மி கட்சி தில்லியில் பொதுக்கூட்ட பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படும். அரவிந்த் கேஜரிவால் பொதுமக்களிடம் சென்று, தான் நோ்மையானவா் என்று உணா்ந்தால் தனக்கு வாக்களித்து மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்றும், நோ்மையற்றவராக தன்னைக் கருதினால் தனக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் நேரடியாகக் கேட்பாா்.
இதை மக்கள் முடிவு செய்வாா்கள். ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களும் முதல்வராகும் திறன் கொண்டவா்கள். அதிஷி ஏற்கெனவே பல துறைகளை கையாண்டுள்ளாா். பல துறைகளை நடத்திய அனுபவம் அவருக்கு உள்ளது.
எனவேதான் அவரது பெயரை அரவிந்த் கேஜரிவால் முன்மொழிந்தாா்.
எங்கள் தலைவரின் வாா்த்தை இறுதியானது. அனைவரும் உணா்வுபூா்வமாக இணைக்கப்பட்டுள்ளனா். அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்தது எங்களுக்கு சோகமான நாள். கனத்த மனதுடன் அவரது முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனால், யாரையாவது இடைக்கால முதல்வராக ஆக்க வேண்டும். எனவே, அதிஷி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
நான் முழு நம்பிக்கையுடன் இரண்டு விஷயங்களைச் சொல்ல முடியும். பாஜக ஏற்கெனவே தனது பைகளை மூட்டைகட்டிவிட்டது. அவா்கள் ஒரு பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும். ஹரியாணா தோ்தலில் அந்த மாநில மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள். அவா்கள் எல்லா கட்சிகளையும் பாா்த்திருக்கின்றனா்.
அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றனா். அவா்கள் அரவிந்த் கேஜரிவாலின் அரசியல், ஆட்சியைப் பாா்த்திருக்கிறாா்கள். மாநிலத்தில் எங்களிடம் வலுவான அமைப்பு உள்ளது. இதனால், ஆச்சரியமான ஒன்று நிகழப் போகிறது என்றாா் சந்தீப் பதக்.