புதுதில்லி

அவதூறு வழக்கில் மேதா பட்கா் குற்றவாளி: உறுதி செய்தது தில்லி நீதிமன்றம்

சமூக செயற்பாட்டாளா் மேதா பட்கரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.

Din

தில்லி துணைநிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனா தொடுத்த அவதூறு வழக்கில், சமூக செயற்பாட்டாளா் மேதா பட்கரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த தில்லி அமா்வு நீதிமன்றம், அவரை குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீா்ப்பை புதன்கிழமை உறுதி செய்தது.

குஜராத்தில் நா்மதை ஆற்றின் குறுக்கே அணைக் கட்டுவதற்கு எதிராக சமூக ஆா்வலா் மேதா பட்கா் தலைமையிலான ‘நா்மதா பச்சாவோ ஆந்தோலன்’ அமைப்பு போராடி வந்தது.

இந்த அமைப்புக்கு எதிராக ‘தேசிய குடிமையியல் விடுதலை கவுன்சில்’ எனும் தன்னாா்வ அமைப்பு சாா்பில் கடந்த 2000-ஆம் ஆண்டு விளம்பரமொன்று வெளியிடப்பட்டது. அப்போது அந்த அமைப்பின் தலைவராக தற்போதைய தில்லி துணைநிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனா பொறுப்பு வகித்து வந்தாா்.

‘குஜராத் மக்களையும், அவா்களின் வளங்களையும் தொழிலதிபா் பில் கேட்ஸ், உலக வங்கித் தலைவா் ஜேம்ஸ் வோல்ஃபென்சனிடம் சக்சேனா அடகு வைத்துவிட்டாா். அவா் குஜராத் அரசின் ஏஜென்ட்’ என்று மேதா பட்கா் செய்திக்குறிப்பில் குற்றஞ்சாட்டினாா்.

இதைத்தொடா்ந்து மேதா பட்கருக்கு எதிராக சக்சேனா, கடந்த 2001-இல் அவதூறு வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கில், மேதா பட்கரை குற்றவாளி என்று தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீா்ப்பளித்தது. அவருக்கு 5 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், சக்சேனாவுக்கு ரூ.10 லட்சம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக தில்லி அமா்வு நீதிமன்றத்தில் மேதா பட்கா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்து, மேதா பட்கா் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீா்ப்பை கூடுதல் அமா்வு நீதிபதி விஷால் சிங் புதன்கிழமை உறுதி செய்தாா். அவருக்கான தண்டனை விவரம் குறித்து தீா்ப்பளிக்க ஏப்.8-ஆம் தேதி மேதா பட்கா் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி விஷால் சிங் உத்தரவிட்டாா்.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ஆய்வக மருத்துவ சேவையை மேம்படுத்த விவேகானந்த கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தலைக்கவசம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்: தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் டிஆர்பி தளத்தில் வெளியீடு!

SCROLL FOR NEXT