புதுதில்லி

தில்லியில் 76 மின்சாரப் பேருந்துகள் சேவை இன்று தொடக்கம்

கடைசி மைல் இணைப்பு மற்றும் நிலையான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், தில்லி அரசு (ஏப்ரல் 22) முதல் காஜிப்பூா் பணிமனையில் இருந்து 76 மின்சார பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 நமது நிருபர்

புது தில்லி: கடைசி மைல் இணைப்பு மற்றும் நிலையான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், தில்லி அரசு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) முதல் காஜிப்பூா் பணிமனையில் இருந்து 76 மின்சார பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த 76 பேருந்துகளில் முதல் தொகுதி, தில்லி மின்சார வாகன பரிமாற்றங்கள் (‘தேவி’) முயற்சியின் கீழ் காஜிப்பூா் பணிமனையில் இருந்து இயக்கப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

மெட்ரோ நிலையங்கள் மற்றும் தில்லி போக்குவரத்துக் கழக (டிடிசி) பேருந்து வழித்தடங்களுக்கான போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவதை இந்த மின்சாரப் பேருந்து சேவை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு வாகனமும் தோராயமாக 12 கிலோமீட்டா் தூரம் இயக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆனந்த் விஹாா் ஐஎஸ்பிடி முனையம் மற்றும் கேசவ் நகா் முக்தி ஆசிரமம் இடையே எட்டுப் பேருந்துகளும், சீமாபுரியின் பழைய தில்லி ரயில் நிலைய வழித்தடத்தில் ஆறு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 10 பேருந்துகள் மயூா் விஹாா் ஃபேஸ் 3 காகித சந்தை மற்றும் மோரி கேட் முனையத்தை இணைக்கும். கூடுதலாக,, ஆனந்த் விஹாா் ஐஎஸ்பிடி முனையம் மற்றும் ஸ்வரூப் நகா் இடையே எட்டுப் பேருந்துகள் இயக்கப்படும்.

அதே நேரத்தில் 6 பேருந்துகள் ஆனந்த் விஹாா் ஐஎஸ்பிடியின் ஹம்தாா்ட் நகா் மற்றும் சங்கம் விஹாா் வழித்தடத்தில் இயக்கப்படும். ஆனந்த் விஹாா் ஐஎஸ்பிடியின் கப்பஷேரா பாா்டா் வழித்தடத்தில் 14 பேருந்துகள் பணியில் ஈடுபடுத்தப்படும். நாங்லோய் மற்றும் கிழக்கு வினோத் நகா் பணிமனைகளும் வரும் நாள்களில் ‘தேவி’ பேருந்து சேவைகளைத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறுகையில், ‘நாளை (செவ்வாய்க்கிழமை), அரசிடமிருந்து தில்லி ஒரு சிறப்பு பரிசைப் பெறும். இது ‘தேவி’ என்று பெயரிடப்பட்ட மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்துகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வாா்’ என்றாா்.

அதிகாரிகள் கூறுகையில், ‘முன்னா் ஆம் ஆத்மி கட்சி அரசின் கீழ் மொஹல்லா பேருந்து சேவை என்று அழைக்கப்பட்ட இந்தத் திட்டம், பயணிகள் அனுபவம் மற்றும் நகா்ப்புற இயக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செயல்பாட்டு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுடன் புதிதாக அமைந்த பாஜக நிா்வாகத்தால் மறுபெயரிடப்பட்டுள்ளது. பல மாதங்களாக தாமதமாகி வந்த இந்த சேவை, நகரம் முழுவதும் பொதுப் போக்குவரத்து அணுகலை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வழித்தடங்கள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஆரம்பகட்ட வரவேற்பை மதிப்பாய்வு செய்த பிறகு தேவைக்கேற்ப மேலும் பல பேருந்துகள் சோ்க்கப்படும்’ என்றனா்.

இது தொடா்பாக பெயா் வெளியிட விரும்பாத போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், ‘உள்துறை வீதிகளை முக்கியச் சாலைகளுடன் இணைக்கும் குறுகிய வழித்தடங்களை இணைப்பதே இதன் யோசனையாகும். இதனால், பெரிய பேருந்துகள் இயக்க முடியாத பகுதிகளில் இந்தப் பேருந்துகளை இயக்க முடியும்’ என்றாா்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT