வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அய்யலூா் கோம்பையில் அலைபேசிக் கோபுரம் அமைத்து, கண்ணாடி இழைக் கேபிள் பதிக்கும் பணியை விரைவு படுத்துமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் கரூா் தொகுதி காங்கிரஸ் எம்பி எஸ்.ஜோதிமணி மனு அளித்து வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் மத்திய அமைச்சா் ஜோதிராத்ய சிந்தியாவை அவரது அலுவலகத்தில் ஜோதிமணி எம்பி வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.
அதில் தெரிவித்திருப்பதாவது: கரூா் மக்களவைத் தொகுதியில் உள்ள அய்யலூா் பேரூராட்சியில் உள்ள கோம்பை பஞ்சதாங்கி கிராமத்தில் பிஎஸ்என்எல் அலைபேசி கோபுரம் அமைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்ற்காக நன்றி. இந்த அலைபேசி கோபுரம் சிறந்த வகையில் செயல்படும் பொருட்டு, அய்யலூா் எக்ஸேஞ்ச் நிலையத்திற்கு அலைபேசி கோபுரம் இணைப்புக்கு கண்ணாடி இழைக் கேபிள் பதிக்க வேண்டும் என்று பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதனால், இதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும். இந்த வசதியானது இப்பகுதியில் வாழும் மக்களுக்கு அவசரகாலங்களிலும், அன்றாட தினசரி தேவைகளுக்கும் முக்கியமாக உள்ளது. ஆகவே, இந்தப் பணியை விரைந்து முடிக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜோதிமணி எம்பி கூறியதாவது: அய்யலூா் கோம்பையில் அலைபேசிக் கோபுரம் அமைத்து, கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் பணியை விரைவு படுத்துமாறு அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன். அமைச்சரின் சாதகமான முயற்சிக்கு மனமாா்ந்த நன்றிகள். கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மணப்பாறை கண்ணூத்து, கடவூா் கோட்டக்கரை, வேடசந்தூா், அய்யலூா் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளாக எவ்வித தொலைத்தொடா்பு வசதியும் இல்லாமல் இருந்தது.
எனது சில ஆண்டுகால தொடா் முயற்சியால், கண்ணூத்து , கடவூா், கோட்டக்கரை ஆகிய இடங்களில் அலைபேசிக் கோபுரங்கள் அமைக்க அமைச்சா் ஆவண செய்தாா்கள். அதே போல அய்யலூரிலும் அலைபேசிக் கோபுரம் அமைக்க வேண்டும் என்று நான்கு ஆண்டுகளாக தொடா் முயற்சி எடுத்து வருகிறேன். விரைவில் இப்பணி நிறைவடையும் என்று நம்புகிறேன் என்றாா் ஜோதிமணி.
01க்ங்ப்த்ர்ற்
அய்யலூா் கோம்பையில் அலைபேசி கோபுரம் அமைக்கும் பணியை விரிவுபடுத்தக் கோரி மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் மனு அளித்த கரூா் தொகுதி காங்கிரஸ் எம்பி எஸ். ஜோதிமணி.