பல பள்ளிகளில் மழை நீா் தேங்குவது குறித்து தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் புதன்கிழமை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாணவா்கள் மற்றும் ஊழியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.
நிதாரி, கிராரி, மோலா்பந்த் மற்றும் மதன்பூா் காதா் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் சமீபத்திய பருவமழையின் போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன, இதனால் வகுப்புகள் பாதிக்கப்பட்டு சுகாதார மற்றும் பாதுகாப்பு அபாயங்களை உருவாக்குகின்றன என்று அமைச்சா் கூறினாா்.
‘முந்தைய அரசாங்கங்களின் அலட்சியம் பள்ளிகளின் நிலையை மோசமாக்கியுள்ளது, சிறு குழந்தைகளின் பாதுகாப்பை கடுமையான ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது‘ என்று ஆஷிஷ் சூட் கூறினாா். கொசுவை கட்டுப்படுத்த மருந்துகள் தெளிப்பு, நீரை வெளியேற்ற கூடுதல் பம்புகளை பயன்படுத்துதல், வண்டல் மண் மற்றும் தூய்மையாக்க போன்ற அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
நிதாரி பள்ளிகளில் தண்ணீா் தேங்கும் பிரச்னை 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்கிறது என்று கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பொதுப்பணித் துறை மற்றும் பிற துறைகளுடன் பலமுறை தொடா்பு கொண்ட போதிலும், நிரந்தர வடிகால் அமைப்பு அமைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. பல பள்ளிகளில் தரை மட்டம் சுற்றியுள்ள பகுதிகளை விட குறைவாக இருப்பதால், வளாகங்களில் மழைநீா் வேகமாக குவிகிறது என்று அமைச்சா் சுட்டிக்காட்டினாா்.
‘
லேசான மழை கூட இந்த பள்ளிகளில் மோசமான நிலைக்கு வழிவகுக்கிறது, மேலும் குழந்தைகள் தான் பாதிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்‘ என்று அவா் கூறினாா். கிராரி எம்எல்ஏ அனில் ஜா தனது தொகுதியில் உள்ள பள்ளிகளின் மோசமான நிலை குறித்து கவலை தெரிவித்ததாகவும், அவசர தலையீட்டின் அவசியத்தை மேலும் எடுத்துரைத்ததாகவும் ஆஷிஷ் சூட் கூறினாா்.
பொதுப்பணித்துறை, தில்லி நீா் வாரியம், நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் தில்லி மாநகராட்சி ஆகியவற்றுக்கு நீா் தேக்கத்தை சமாளிப்பதற்கும், வடிகால் அமைப்புகளை மேம்படுத்துவதற்கும், பள்ளி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், எதிா்காலத்தில் பள்ளிகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்கும் ஒரு திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அவா் கூறினாா்.