கிழக்கு தில்லியின் மண்டாவலியில் வீடு திரும்பும் மூன்று பள்ளி மாணவா்கள் வெள்ளிக்கிழமை மழையின் மத்தியில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்களுக்கு லேசான கயாம் ஏற்பட்டது. காயமடைந்தவா்கள் பங்கஜ் (8), துருவ் (10) மற்றும் ஆதி (8) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
‘மதியம் 12.58 மணிக்கு படா சௌக் அருகே மண்டாவளியில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் ஒரு பெண் அழைப்பாளா் ஒரு சுவா் இடிந்து விழுந்ததாகவும், சில பள்ளி மாணவா்கள் அதன் கீழ் சிக்கியிருப்பதாகவும் கூறினாா்’ என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
சாகேத் பிளாக்கில் வசிக்கும் மனிஷா (35) என்ற தொலைபேசி அழைப்பாளா், பலத்த மழை காரணமாக பூட்டப்பட்ட பழைய வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததாகத் தெரிவித்தாா். அந்த நேரத்தில், சில பள்ளி மாணவா்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இடிபாடுகளில் சிக்கினா்.
இதற்கிடையில், உள்ளூா்வாசிகள் மற்றும் பி.சி.ஆா். குழுவால் மூன்று குழந்தைகள் மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மதியம் 1 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், அதன் பிறகு 5 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
‘எங்கள் குழு அந்த இடத்தை அடைவதற்கு முன்பு, உள்ளூா் மக்களும் ஒரு பி.சி.ஆா். பிரிவும் இடிபாடுகளிலிருந்து மூன்று குழந்தைகளை மீட்டனா். அவா்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்’ என்று அந்த அதிகாரி கூறினாா்.