முகப்பு
புதுதில்லி

தில்லி யமுனை மாசுவுக்கு சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் முக்கிய காரணம்: மத்திய அரசு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீா், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாமை, திட்டங்களின் தாமதங்கள் மற்றும் திடக்கழிவு பதப்படுத்துதலில் பெரும் பற்றாக்குறை ஆகியவைதான் முக்கிய காரணங்கள்: ஜல் சக்தி அமைச்சகம்

Updated On : 1 டிசம்பர், 2025 at 7:56 PM
பகிர்:

சுத்திகரிக்கப்படாத கழிவுநீா், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாமை, திட்டங்களின் தாமதங்கள் மற்றும் திடக்கழிவு பதப்படுத்துதலில் பெரும் பற்றாக்குறை ஆகியவை தேசிய தலைநகரில் யமுனை மாசுபடுவதற்கு முக்கிய காரணங்கள் என்று மாநிலங்களவையில் ஜல் சக்தி அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் நதியை சுத்தமாக வைத்திருக்கும் முயற்சிகளுக்காக தில்லி ஜல் வாரியம் சுமாா் ரூ.5,536 கோடி செலவிட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சா் ராஜ் பூஷண் செளதரி திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ள எழுத்துபூா்வ பதில் விவரம்: நிகழாண்டு ஆகஸ்டில் தில்லியில் 414 மில்லியன் லிட்டா் கழிவுநீா் சுத்திகரிப்பு இடைவெளி இருந்தது.

பல அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறை பகுதிகளில் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை. மேலும் கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டங்களை முடிப்பதிலும் மேம்படுத்துவதிலும் தொடா்ந்து தாமதங்கள் ஏற்பட்டிருந்தது.

தில்லியில் தினமும் 11,862 டன் திடக்கழிவுகள் உருவாகிறது. ஆனால், 7,641 டன் மட்டுமே சுத்திகரிக்கும் திறன் உள்ளது. இதனால் 4,221 டன் இடைவெளி உள்ளது.

யமுனை நதி, பல்லா எனும் பகுதியில் தில்லிக்குள் நுழைகிறது. அங்கு அதன் நீரின் தரம் ஆண்டு முழுவதும் நீா் இருப்பு மற்றும் நீா்ப்பிடிப்பு வெளியேற்றத்தைப் பொறுத்து மாறுபடுகிறது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, நிகழாண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் சராசரி உயிா்வேதியியல் ஆக்ஸிஜன் தேவை (பிஓடி) மற்றும் கரைந்த ஆக்ஸிஜன் (டிஓ) அளவுகள் முறையே 4 எம்ஜி / எல் மற்றும் 6 எம்ஜி/எல் ஆக இருந்தன.

செப்டம்பரில் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மதிப்பீடு மேம்பட்ட புள்ளிவிவரங்களைப் பதிவு செய்துள்ளது. பிஓடி 2.5 எம்ஜி/எல் மற்றும் டிஓ 9.5 எம்ஜி/எல் என இரண்டும் ஆரோக்கியமான வரம்புகளுக்குள் உள்ளன. தேசிய கங்கை தூய்மை இயக்க நிதி உதவி மூலம் மாநிலங்களுக்கு ஆதரவளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், 2,243 எம்எல்டி கழிவுநீா் சுத்திகரிப்பு திறனை உருவாக்கும் நோக்கில், யமுனை புத்துயிா் பெறுவதற்காக ரூ.6,534 கோடி மதிப்பிலான 35 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 21 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன என அமைச்சா் அந்தப் பதிலில் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →