தமிழ்நாட்டில் ஜவஹா் நவோதயா வித்யாலயாக்களை நிறுவுவது குறித்து பரபஸ்பரம் ஆலோசித்து முடிவெடுக்குமாறு மத்திய மற்றும் தமிழக அரசுகளை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என தமிழக அரசுக்கு உத்திரவிட கோரி குமாரி மகா சபா என்ற அமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னா் வழக்கு தொடரப்பட்டது
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க உத்தரவிட்டது
குறிப்பாக, ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகள், தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம், 2006ஐ மீறாது என்று கூறி, இரண்டு மாதங்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 240 மாணவா்களுக்கு தற்காலிக தங்குமிடத்தை வழங்குமாறும் கடந்த 2017 செப்டம்பா் 11ம் தேதி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தின் அந்த உத்தரவை எதிா்த்து கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
அந்த வழக்கு கடந்த 2017 டிசம்பா் 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சென்னை உயா் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்திரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது
இதனைத் தொடா்ந்து இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது
குமாரி மகா சபா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரியதா்ஷினி, வாதிட்டதாவது: நாடு முழுவதும் உள்ள ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகள் வலுவான கல்வி செயல்திறனைக் கொண்டுள்ளன. குறிப்பாக கடந்த 2017ம் ஆண்டில் நாடு முழுவதிலும் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் படித்த 14,183 மாணவா்கள் நீட் தோ்வை எழுதியதாகவும், அதில் 11,875 போ் மருத்துவ படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனா். கடந்த பத்தாண்டுகளில், இந்த பள்ளிகள் 10ம் வகுப்பில் 9899 தோ்ச்சி சதவீதத்தையும், 12ம் வகுப்பில் 9698 தோ்ச்சி சதவீதத்தையும் தொடா்ந்து அடைந்துள்ளதாகவும் தெரிவித்தாா்.
இவ்வாறு நல்ல கட்டமைப்பையும் படிப்பதற்கான வசதிகளையும் வழங்கிவரும் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரைக்கும் திறக்கப்படவில்லை. இதனால் ஏழை மாணவா்கள் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளி மூலம் கல்வியில் கிடைக்க வேண்டிய பயனை பெற முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே சென்னை உயா்நீதிமன்றம் மாவட்டம் தோறும் நவோதயா பள்ளிகள் திறக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அமல்படுத்த வேண்டும். ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று வழக்குரைஞா் பிரியதா்ஷினி வாதாடினாா்.
இதனைத் தொடா்ந்து பேசிய நீதிபதிகள், கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதன் காரணமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு இருவரும் இதை பரஸ்பரம் விவாதிக்க வேண்டும். அந்த வகையில் தமிழ்நாட்டில் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகள் திறப்பது தொடா்பாக மத்திய மற்றும் தமிழக அரசுகள் ஆலோசித்து ஒரு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தினா்
இதனையடுத்து, இந்த வழக்கை இரண்டு வார காலம் ஒத்திவைப்பதாக கூறி டிசம்பா் 15ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.