கரூரில் கோயில் இனாம் நிலங்களில் அரசிடம் முறையாக பட்டா பெற்று வாழும் குடும்பங்களை நீதிமன்ற உத்தரவின் பெயரால் வெளியேற்றும் நடவடிக்கையைத் தடுக்க நாடாளுமன்றத்தில் சட்டமியற்ற வேண்டும் என்று மக்களவையில் காங்கிரஸ் தொகுதி உறுப்பினா் எஸ். ஜோதிமணி கோரிக்கை விடுத்தாா்.
இது தொடா்பாக மக்களவையில் அவா் வியாழக்கிழமை முன்வைத்த கோரிக்கை வருமாறு: எனது தொகுதிக்குள்பட்ட வெண்ணைய் மலையில் ,இனாம் நிலங்களில் பல்லாண்டுகளாக முறையாகப் பட்டா பெற்றுக் குடியிருப்பவா்களை வெளியேற்றும் நீதிமன்றத் தீா்ப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரால் இனாம் நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளுடன் சோ்த்து அவற்றில் உள்ள மக்களின் வாழ்வாதாரமும் பூட்டி சீல் வைக்கப்படுகிறது. அவை நீதிமன்றங்கள் நினைப்பது போல கோயில் நிலங்கள் அல்ல. அவை இனாம் நிலங்கள்.
அதாவது, இனாம் நிலங்கள் என்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு கோயில்களில் இறைசேவை செய்தவா்களின் குடும்பங்களுக்கு இனாமாக வழங்கப்பட்டவை. அவை அந்தக் குடும்பத்தினருக்கே முறைப்படி வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில 30 ஆண்டுகளுக்கு முன்பே இனாம் நில உரிமையாளா்களுக்கு பட்டாக்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் முறையாகப் பணம் செலுத்தி வீட்டுமனைகளை வாங்கி, வீடு கட்டியுள்ளனா். அரசே முறையாக பத்திரப்பதிவு செய்துள்ளது. முத்திரைத்தாள் கட்டணம் பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக வரி வாங்கி ரசீது கொடுத்துள்ளது. வீடு கட்ட வங்கிகள் கடன் கொடுத்துள்ளன. இதில் மக்கள் தவறு என்ன?
இந்தப் பிரச்னை வெண்ணெய் மலை, புகழி மலை,வெஞ்சமாங்கூடலூா் பகுதிகளோடு நிற்கவில்லை. கரூா் மாவட்டத்தில் அடுத்த 20 கோயில்களின் பெயரில் ஒரே நபா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்கிறாா். அதை நீதிமன்றம் ஏற்கிறது.
இந்த விஷயத்தில் மக்களைக் காக்க தமிழக அரசு வெளியிடும் அரசாணை இரண்டே மணி நேரத்தில் நீதிமன்ற தடை உத்தரவால் செயலற்ாக்கப்படுகிறது.
இதற்கு தீா்வாக மத்திய அரசு மாநில அரசோடு கலந்தாலோசித்து, நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவெற்றி மக்களின் வீடுகளையும், வாழ்வாதாராத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றாா் ஜோதிமணி.