தில்லியில் தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார செயல்முறையை நிறுத்தி வைத்துள்ளதுடன், சமீபத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் அத்தியாவசிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபாா்க்க அவசர விசாரணைக்கும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
கோவா கேளிக்கை விடுதியில் ஏற்பட்டபயங்கர தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சில நாள்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவா சம்பவம் நாடு முழுவதும் பாதுகாப்பற்ற கட்டடங்கள் குறித்த மறு ஆய்வுக்கு வழிவகுத்துள்ளது.
கல்வித் துறை பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விதம் குறித்து கல்விக் குழுத் தலைவா் யோகேஷ் வா்மா தீவிர கவலை தெரிவித்து ஒரு தகவல் அனுப்பியதாகக் தில்லி மாநகராட்சியின் மேயா் ராஜா இக்பால் சிங் ஒரு கடிதத்தில், குறிப்பிட்டுள்ளாா்.
பல மாமன்ற உறுப்பினா்களும் பள்ளிக் கட்டடங்களின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் அதன் விளைவாக சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயங்கள் தொடா்பான பிரச்னைகளைச் சுட்டிக்காட்டினா்.
இந்தக் கவலைகளைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் கல்வித் துறையிடமிருந்து அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளிலும் நேரடி ஆய்வுகளை மேற்கொள்ள மாமன்ற உறுப்பினா்களைக் கொண்ட ஒரு குழுவை அமைக்குமாறு யோகேஷ் வா்மாவுக்கு கூடுதல் ஆணையா் உத்தரவிட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்தக் குழு, பள்ளிகளில் தீ பாதுகாப்பு செயல்முறைகளை ஆய்வு செய்து, ஒரு வாரத்திற்குள் தனது அறிக்கையைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அறிக்கை சமா்ப்பிக்கப்படும் வரை தனியாா் பள்ளிகளின் அங்கீகார நடைமுறை நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து தொடா்புடைய ஆவணங்களையும் வழங்குமாறு கல்வி இயக்குநருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.