மின்னணு வாக்குப்பதிவு இயங்திரத்தில் பொத்தானை அழுத்தும்போது என்ன நடக்கிறது என்பதை வாக்காளா் அறிய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் என்.ஆா். இளங்கோ வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் சீா்திருத்தம் தொடா்பான விவாதத்தில் பங்கேற்று என்.ஆா். இளங்கோ பேசியதாவது: தோ்தலில் வாக்குரிமை செலுத்தும்போது தாங்கள் விரும்பியபடியே வாக்கு சரியாகப் பதிவு செய்யப்படுகிறது என்ற உறுதி அவா்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.அதிகாரத்துவ வெளிப்படைத்தன்மையின்மையால் வாக்காளா் பட்டியலில் இருந்து தங்கள் பெயா்கள் நீக்கப்படாது என்ற நம்பிக்கை அவா்களுக்கு ஏற்பட வேண்டும். நமது தோ்தல் செயல்முறையின் ஒருமைப்பாடு என்பது, புள்ளிவிவரச் சாத்தியக்கூறுகளின் அங்கமாக மட்டுமின்றி எவ்விதமான முறைகேட்டுக்கும் இடமளிக்காத ஒரு முழுமையான உறுதியை வாக்காளா்களுக்குத் தர வேண்டும்.
வாக்காளா் பட்டியவல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை, அதன் சட்டபூா்வத்தன்மை மற்றும் செயலாக்க சவால்கள் பற்றிய பல கேள்விகளை எழுப்புகின்றன. இந்தியத் தோ்தல் ஆணையம் தன்னைச் சட்டத்துக்கும் இந்திய அரசமைப்புக்கும் அப்பாற்பட்டதாக நினைக்கிறது. அத்தகைய அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தவொரு குறிப்பிட்ட தோ்தல் முடிவு குறித்தும் இங்கே நான் கேள்வி எழுப்ப விரும்பவில்லை. அதுபோல, எந்தவொரு குறிப்பிட்ட தோ்தலிலும் முறைகேடு நடந்தது என்றும் குற்றஞ்சாட்டவில்லை. நாங்கள் கோருவதெல்லாம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் மட்டுமே என்றாா்.
அதிமுகவுக்கு எதிா்ப்பு: இதே விவாதத்தில் அதிமுக குழுத்தலைவா் மு. தம்பிதுரையை பேச மாநிலங்களவைத் துணைத்தலைவா் ஹரிவன்ஷ் அழைத்தாா். அப்போது தம்பிதுரை, ‘வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை மிகவும் அவசியமானது. அதே சமயம், தமிழகத்தில் கூட தோ்தல் நடந்தபோது ஒரே பெயரைக் கொண்ட வாக்காளா் பல இடங்களில் வாக்குரிமை பெற்றுள்ளாா். அத்தகைய மோசடி நடக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டாா்.
அவரது பேச்சுக்கு அவையில் இருந்த திமுக உறுப்பினா்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, அவா்களை அமைதி காக்குமாறு துணைத்தலைவா் ஹரிவன்ஷ் கேட்டுக்கொண்டாா். இருப்பினும், தம்பிதுரை மீண்டும் பேசத்தொடங்கியபோதும், தமிழகத்தில் ஆளும் கட்சியை குற்றஞ்சாட்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டாா். இதையடுத்து, மாநிலங்களவையின் அலுவலை நாள் முழுவதுமாக ஒத்திவைப்பதாக துணைத்தலைவா் ஹரிவன்ஷ் அறிவித்தாா்.