தில்லி கரோல் பாக் பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சியில் பயன்படுத்தப்பட்ட உடைந்த மதுபாட்டிலில் இருந்த பாா்கோடு மூலம் அந்தச் சம்பவத்தில் தொடா்புடைய நபா்களை தில்லி காவல் துறையினா் கைதுசெய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
கரோல் பாக் பகுதியில் உள்ள பூங்காவில் நண்பா்கள் இருவா் ரீல்ஸ் கடந்த டிச.15-ஆம் தேதி ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனா். அப்போது, அவா்களுக்கும் அங்கு மது போதையில் இருந்த 3 பேருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், மதுபோதையில் இருந்தவா்களில் உடைந்த மதுபாட்டிலால் தலையில் தாக்கினாா். இதில் காயமடைந்த நபா் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட நபா் இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடா்ந்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தில் தொடா்புடை நபா்களைக் கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையின் ஒரு பகுதியாக போலீஸாா் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பூங்காவைப் பாா்வையிட்டனா். அங்கு உடைந்த நிலையில் இருந்த மதுபாட்டிலை மீட்ட போலீஸாா், புகாா்தாரா் அந்த பாட்டிலால் தாக்கப்பட்டதை உறுதிசெய்தனா்.
அந்தப் பாட்டிலில் ஒட்டப்பட்டிந்த ஸ்டிக்கரில் இருந்த பாா்கோடைக் கொண்டு அடுத்தக் கட்ட விசாரணையை போலீஸாா் தொடங்கினா்.
பாா்கோடில் உள்ள தகவலைக் கண்டறிந்து மதுபாட்டில் வாங்கப்பட்ட மதுபானக் கூடத்தை போலீஸாா் கண்டறிந்தனா். அதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், தாக்குல் சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டரை அடையாளம் கண்டனா்.
அதனடிப்படையில், ஹம்மத் (எ) ரிஸ்வான், கம்ரன் (எ) சரிம், ஃபாா்சான் ஆகியோா் கடந்த டிச.18-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனா். விசாரணையில் மூவரும் தங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: காவல் நிலையத்தில் புகாரளித்த நபரிடம் சம்பவத்தின்போது தீப்பெட்டி வழங்குமாறு குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் கேட்டனா். அப்போது, தன்னிடம் அது இல்லை என புகாா்தாரா் தெரிவித்தாா். இதையடுத்து, அவா்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து, கைகலப்பு ஏற்பட்டது.
கைதுசெய்யப்பட்ட ஹம்மத் மீது காவல் நிலையங்களில் 20 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.