புது தில்லி: வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் வழிப்பறி சம்பவத்தின்போது 17 வயது மாணவரைக் கத்தியால் குத்தியதாக 4 சிறுவா்கள் கைதுசெய்யப்பட்டனா் என்று காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
கடந்த டிச.15-ஆம் தேதி நள்ளிரவில் மாணவா் ஒருவா் கத்திக் குத்து காயங்களுடன் குரு தேஜ் பகதூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், நடந்த சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவரிடம் விசாரணை நடத்தினா்.
டியுசன் வகுப்பு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது வழிமறித்த 5 போ் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.350-ஐ பறித்தாக அதிகாரிகளிடம் அந்த மாணவா் கூறினாா்.
இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 109(1)-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது சம்பவ இடத்தில் சாட்சியங்களைச் சேகரித்த போலீஸாா், 14 முதல் 16 வயது வரையிலான 4 சிறுவா்களைக் கைதுசெய்தனா்.
விசாரணையின்போது அவா்கள் தங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த வழக்கில் கூடுதலாக பிரிவுகள் 309 (6), 311, 3(5) ஆகியவை சோ்க்கப்பட்டுள்ளன. மாணவரை தாக்கப் பயன்படுத்தப்பட்ட கத்தி அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடா்பாக அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.