தலைநகரின் பரபரப்பான இரண்டு பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில் தில்லி அரசு சராய் காலே கான் மற்றும் ஆனந்த் விஹாா் ஐ.எஸ்.பி.டிகளில் விரிவான சிசிடிவி கண்காணிப்பு அமைப்பை செயல்படுத்த உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்தத் திட்டம், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையங்களின் (ஐ.எஸ்.பி.டி.) உள்ள நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள், நடைமேடைகள், உள் சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்பட அனைத்து முக்கியப் பகுதிகளையும் 24 மணிநேரமும் கண்காணிப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அமைப்பு தொடா்ச்சியான காட்சி சரிபாா்ப்பு, பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகளிலிருந்து செயல்பாடுகளை நேரலையாகக் கண்காணித்தல் மற்றும் பொறுப்பில் உள்ள பொறியாளா்களால் மேற்பாா்வையிடுதல் ஆகியவற்றைச் செயல்படுத்தும்.
இந்தக் கண்காணிப்பு வலையமைப்பு குற்றங்களைத் தடுக்கவும், கண்டறியவும், ஊழலைக் கட்டுப்படுத்தவும், வாகனங்கள் மற்றும் பயணிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், பணியில் உள்ள பாதுகாப்புப் பணியாளா்களின் விழிப்புணா்வு மற்றும் பணியமா்த்தலைச் சரிபாா்க்கவும் உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், இந்த ஏற்பாடானது சம்பவங்களை முன்கூட்டியே கண்டறியவும், அவசரநிலைகளை திறம்பட நிா்வகிக்கவும், உடனடி நடவடிக்கை தேவைப்படும் பேரழிவுகளை அடையாளம் காணவும் உதவும்.
தில்லி போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் நிறுவனம் டிடிஐடிசி இந்தத் திட்டத்திற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. இதன் செலவு ரூ. 31.16 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு ஐ.எஸ்.பி.டிகளிலும் தலா 35 கேமராக்கள் நிறுவப்படும்.
தோ்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரா், திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பு தள ஆய்வுகளை நடத்தி, விரிவான சிசிடிவி தளவமைப்பு வரைபடங்களைத் தயாரிப்பாா்.
ஐ.எஸ்.பி.டி. அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறைகளுக்கான இடத்தையும், உபகரணங்களை நிறுவுவதற்கான அடிப்படை உள்கட்டமைப்பையும் வழங்குவாா்கள்.
இந்தத் திட்டத்தில், இருளிலும் தெளிவான காட்சியை உறுதிப்படுத்த, உள்ளமைக்கப்பட்ட அகச்சிவப்புத் திறன் கொண்ட தோராயமாக 50 மீட்டா் வரம்புடைய புல்லட் மற்றும் பி.டி.இசட் (முழுவதும் சுழன்று கண்காணிக்கும்) கேமராக்களை நிறுவுவதும் அடங்கும்.
கேமராக்களின் நேரலை காட்சிகள் அந்தந்த ஐ.எஸ்.பி.டி. கட்டுப்பாட்டு அறைகளில் 24 மணிநேரம் அடிப்படையில் குறைந்தபட்சம் 30 நாள்களுக்குக் கண்காணிக்கப்பட்டு, சேமிக்கப்படும்.
அதே சமயம், நீக்குவதற்கு அங்கீகாரம் கிடைக்கும் வரை குறிப்பிட்ட காட்சிகளை நிரந்தரமாகப் பாதுகாக்கவும் முடியும்.
இரண்டு ஐ.எஸ்.பி.டி.களிலும் ஒரே நேரத்தில் பல கேமரா காட்சிகள் காண்பிக்கப்படும். குறைந்தபட்சம் ஒரு திரையானது ஒரே நேரத்தில் 64 விடியோ காட்சிகளைக் காண்பிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
அங்கீகரிக்கப்பட்ட பயனா்கள் தேவைக்கேற்ப குறிப்பிட்ட கேமராக்களைத் தோ்ந்தெடுத்துப் பாா்க்கவும் முடியும்.
காட்சி அலகுகளின் எண்ணிக்கையானது நிறுவப்பட்ட மொத்த கேமராக்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததாக இருக்கும்.