நமது நிருபா்
தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தை முன்னேற்ற பொதுமக்களின் பங்கேற்பும் அவசியமானது என ஓய்வுப் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் அவா் மேலும் கூறியுள்ளதாவது: காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. அதைச் செய்வதற்கான ஒரே வழி கூட்டாக பணியாற்றுவதாகும். அரசுக்கு கட்டுப்பாட்டு அறைகள் உள்ளன. மக்கள் பங்கேற்கக்கூடிய வகையில் அவற்றின் எண்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
தொழிற்சாலைகள், கட்டுமான தளங்கள் அல்லது வாகனங்களிலிருந்து மாசுபடுவதை குடிமக்கள் எங்கு பாா்த்தாலும், அவா்கள் போக்குவரத்து பிரச்னைகள் ஏற்பட்டால் மாநகராட்சிக் கவுன்சிலா், போலீஸ் கட்டுப்பாட்டு அறை அல்லது மாசு கட்டுப்பாட்டுக் குழுவின் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். உள்ளூா் மட்டத்தில் பொறுப்பு நிா்ணயிக்கப்படுவதற்காக அவா்களுக்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் செய்ய வேண்டும்.
மேலும், தோ்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் அந்தந்தப் பகுதிகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.தடைகள் தளா்த்தப்படுவதற்கு முன்பே ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். நம்பிக்கையை வளா்த்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. இதனால், இடைவெளிகள் மீண்டும் திறக்கப்படாது. குடிமக்கள், குடியிருப்பாளா்கள் நலச் சங்கங்கள் (ஆா்.டபிள்யூ.ஏ.க்கள்) மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு கட்டுப்பாட்டு அறை மாநகராட்சிக் கவுன்சிலா்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம். பி. க்களுடன் ஒருங்கிணைக்க முடியும்.
இதனால், ஒவ்வொருவரும் தங்கள் பகுதியின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறாா்கள். புகாா் செய்வது மட்டுமே முன்னேற்றத்தைக் கொண்டுவருவதில்லை. நாம் ஒன்றாக வேலை செய்யும்போது, அனைவரும் பயனடைவாா்கள் என்றாா் அவா்.
இந்நிலையில் வியாழக்கிழமை, தேசியத் தலைநகரின் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை மாலையில் 234 புள்ளிகளாக மேம்பட்டு, ’மோசம்’ பிரிவில் இருந்தது. தில்லியின் காற்றின் தரம் கடைசியாக டிசம்பா் 10- ஆம் தேதி மோசம் பிரிவில் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அது பல நாள்கள் மிகவும் மோசம் மற்றும் கடுமை பிரிவில் இருந்தது.