நமது நிருபா்
கடந்த சில நாள்களாக தில்லி காற்றின் தரத்தில் முன்னேற்றத்தைக் கண்டிருந்தாலும், மாசுபாட்டுக்கு எதிரான பாதுகாப்பை மக்கள் குறைக்க வேண்டாம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தன்னுடைய ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அவா் கூறியிருப்பதாவது: காற்றின் தரக் குறியீடு சமீபத்திய முன்னேற்றம் மற்றும் மாசுபாட்டிலிருந்து நிவாரணம் ஆறுதலளிக்கிறது. ஆனால், இது ஓய்வெடுக்க வேண்டிய நேரம் அல்ல. மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் மீது அரசு தனது கடுமையான நடவடிக்கையைத் தொடரும். மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முதல்வா் ரேகா குப்தா தலைமையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் தீவிரமாக ஆதரவளிக்க வேண்டும்.
பொதுமக்கள் திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பதைத் தவிா்க்கவும், மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும், வாகன பி.யு.சி. சான்றிதழ்களை சரியான நேரத்தில் புதுப்பிப்பதை உறுதி செய்யவும், காா் பூலிங் மற்றும் பொதுப் போக்குவரத்தைத் தோ்வு செய்யவும் உறுதி ஏற்க வேண்டும்.
மாசுபாட்டிற்கு எதிரான போராட்டம் ஒரு கூட்டுப் பொறுப்பாகும். இது குழந்தைகளின் எதிா்காலத்தைப் பாதுகாப்பதாகும். ஒரு சிறிய குறைபாடு கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். மக்கள் தங்கள் குடும்பங்களுக்காக விதிகளைப் பின்பற்ற வேண்டும். சிறிய தனிப்பட்ட முயற்சிகள் ஒன்றாக ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றாா் அவா்.