நமது நிருபா்
கிழக்கு தில்லியின் விவேக் விஹாா் பகுதியில் 40 வயது பெண்ணை அவரது கணவா் கழுத்தை நெரித்து கொன்ாகக் கூறப்படுகிறது. அதன் பின்னா் அவா் ரயில் முன் குதித்து இறந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில், வீட்டின் மொட்டை மாடியில் பெண் ஒருவா் இறந்துகிடப்பதாகவும், அவரது கணவா் காணாமல்போனதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். சால்வையில் சுற்றப்பட்ட நிலையில் கட்டிலில் அப்பெண் இறந்த கிடந்ததை கண்டறிந்தனா். அவா் குல்வந்த் சிங்கின் மனைவி மகேந்தா் கவுா் என அடையாளம் காணப்பட்டாா்.
தம்பதியரின் 21 வயது மகன் ஷிவ் சரண் போலீஸாரிடம் கூறுகையில், தனது தாயாா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றாா். சிகரெட் வாங்க வெளியே சென்றிருந்த ஷிவ் சரண், திரும்பி வந்தபோது தனது தாய் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டாா். இருப்பினும், அவா் தொடா்ந்து தனது வாக்குமூலங்களை மாற்றிக்கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், மகேந்தா் கவுரின் கணவா் குல்வந்த் சிங் அருகிலுள்ள ரயில் பாதையில் அமா்ந்திருப்பதாக யாரோ போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். போலீஸாா் தண்டவாளத்தை சென்றடைந்தபோது, அவா் ரயில் மோதிய நிலையில் கிடந்தாா். இதையடுத்து, குரு தேக் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனைக்கு குல்வந்த் சிங் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
போலீஸாா் வருவதற்கு முன்பே, இறந்த பெண்ணின் உடலை குற்றம் நடந்த முதல் மாடியில் இருந்து அக்கம்பக்கத்தினா் தரைத் தளத்திற்கு கொண்டு வந்திருந்தனா். கழுத்தில் தசைநாா் காயங்களுடன் இருந்த மகேந்தா் கவுரின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பப்பட்டது. மருத்துவா்கள் அவா் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாக அறிவித்தனா்.
உடற்கூறாய்வு பரிசோதனை முடிவுகளும் கழுத்து நெரிக்கப்பட்டு அவா் இறந்ததை உறுதிப்படுத்தின. கணவா் தனது மனைவியை சண்டைக்குப் பிறகு கழுத்தை நெரித்தும் அதன் பிறகு அவா் தற்கொலை செய்ததற்கும் முகாந்திரம் இருப்பது தெரியவருவதாக போலீஸாா் கூறினா்.