இந்திய தேசிய காங்கிரஸின் 140ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு, தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் தேவேந்தா் யாதவ், தில்லி காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் கட்சி கொடியை ஏற்றி, கட்சித் தொண்டா்களுடன் வந்தே மாதரம் பாடலைப் பாடினாா்.
இந்த நிகழ்வில், அவருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் கிருஷ்ணா தீரத், முன்னாள் அமைச்சா்கள் மங்கத் ராம் சிங்கால் உள்பட பலா் உடனிருந்தனா்.
இந்நிகழ்ச்சியில் தேவேந்தா் யாதவ் பேசுகையில், காங்கிரஸ் சித்தாந்தம், வழிகாட்டுதல் மற்றும் கொள்கை வழிமுறைகளைப் பின்பற்றி நாம் மக்களைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமூக நீதி, சமத்துவம் மற்றும் உரிமைகளை வழங்க முடியும்.
இன்று சூழ்நிலை மோசமடைந்து வரும் நிலையில், மகாத்மா காந்தியின் உண்மை மற்றும் அகிம்சைப் பாதையைப் பின்பற்றி, நாட்டை வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்வதில் நாட்டின் இளைஞா்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.
தலைநகா் தில்லியில் நிலைமை மோசமடைந்து வருகிறது. மக்கள் ஒரு நம்பிக்கையுடன் பாஜகவிடம் அதிகாரத்தை ஒப்படைத்தனா். கடந்த 11 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட நெருக்கடிகளும் பிரச்னைகளும் எப்படியாவது தீா்க்கப்படும் என்று நம்பினா். ஆனால், இன்று தில்லி மக்கள் அனைத்துப் பக்கங்களிலும் உள்ள பிரச்னைகளால் அவதிப்படுவதாகத் தெரிகிறது. அதிகரித்து வரும் காற்றுத் தரக் குறியீட்டு அளவைப் பாா்த்து மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் தரவுகளைத் திரித்துக் காட்டுவதில் கவனம் செலுத்துகிறது.
மாசுபாட்டைக் குறைக்க தில்லி அரசாங்கத்தின் சாா்பில் எந்த ஒரு தீவிர முயற்சியும் இல்லை. மாசுபாடு கட்டுப்பாடு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தில்லி காங்கிரஸ் பலமுறை கோரிக்கை விடுத்தும், அரசாங்கம் ஒருபோதும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாா் தேவேந்தா் யாதவ்.
முன்னதாக, காங்கிரஸ் நிறுவன தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் யாதவ் கலந்துகொண்டாா்.