புது தில்லி: வடமேற்கு தில்லியின் குஜ்ரன்வாலா பகுதியில் வணிக வளாகத்திற்கு பில்லியா்ட்ஸ் விளையாடச் சென்றபோது, அங்குள்ள உணவகத்தின் பிளாஸ்டிக் கொட்டகையிலிருந்து தவறி விழுந்ததில் 16 வயது சிறுவன் உயிரிழந்ததாக காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது:
கடந்த சனிக்கிழமை அன்று இந்தச் சம்பவம் தொடா்பாக காவல்துறைக்கு ஒரு அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்குச் போலீஸாா் சென்றபோது, காயமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த கபின் என்ற 11ஆம் வகுப்பு மாணவரை, அவரது நண்பா்கள் ஏற்கனவே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தது தெரியவந்தது.
கபின் தனது வகுப்புத் தோழா்களான ஆா்யாமென், கபீா் மற்றும் யஷ் தியாகி ஆகியோருடன் பொழுதைக் கழிக்க அந்த உணவகத்திற்கு சென்றுள்ளாா். முதல்கட்ட விசாரணையில், அந்தச் சிறுவா்கள் படிக்கட்டு வழியாக கட்டடத்தின் உச்சிக்குச் சென்றது தெரியவந்தது. கபின் அருகருகே உள்ள கடைகளுக்கு இடையேயான கேலரி பகுதிக்கு கூரையாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கொட்டகையின் மீது ஏறியுள்ளாா். அந்தக் கொட்டகை அவரது எடையைத் தாங்க முடியாமல் சரிந்து விழுந்தது. இதில் அச்சிறுவன் கீழே தரையில் விழுந்தாா். இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான், அங்கு மருத்துவா்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவங்களின் சரியான வரிசையை உறுதி செய்வதற்காக குற்றவியல் போலீஸாரும், தடயவியல் நிபுணா்களும் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து கபினின் தந்தை ராகுல் குமாா் கூறுகையில், எனது மகனின் மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் சந்தேகத்திற்குரியவையாக உள்ளது.
எங்கள் வீடு அருகிலேயே, மூன்று நிமிட பயணத் தொலைவில் உள்ள ஒரு மாலில் பில்லியா்ட்ஸ் விளையாடுவதற்காக, எங்கள் மகன் அவரது தாயிடமிருந்து ரூ.100 வாங்கிக்கொண்டு வெளியே சென்றாா். சுமாா் ஒரு மணி நேரம் கழித்து, அவா் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது.
சம்பவத்திற்குப் பிறகு என் மகனின் நண்பா்கள் யாரையும் காணவில்லை. மருத்துவமனை ஊழியா்கள்தான் அந்தச் சிறுவனை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா்.
அவனுடைய நண்பா்களிடம் பேசிய பிறகு, அவா்களின் வாக்குமூலங்கள் சந்தேகத்திற்குரியதாகவும் மனிதாபிமானமற்ாகவும் தோன்றின. ஒரு நண்பனுக்கு ஏதாவது நடந்தால், உஷாா்படுத்துவது அல்லது அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுதான் இயல்பு. அப்படி எதுவும் நடக்கவில்லை. எனது மகன் சுமாா் 100 அடி உயரத்தில் இருந்து விழுந்துள்ளாா். அவா் அந்த இடத்திற்கு எப்படிச் சென்றாா்? இதில் சதி நடந்திருக்கலாம் என்று ராகுல் குமாா் குற்றம் சாட்டினாா். இதுகுறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.