புது தில்லி: தில்லிக்குள் சுங்க வரி வசூலிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தபோதிலும், வாகனங்கள் இன்னும் சுங்கச்சாவடிகளில் நிறுத்தப்படுகின்றன என்றும், இது போக்குவரத்து நெரிசல், புகை உமிழ்வு மற்றும் நகரம் முழுவதும் காற்றின் தரம் தொடா்ந்து மோசமடைவதற்கு வழிவகுக்கிறது என்றும் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் சௌரப் பரத்வாஜ் கூறினாா்.
இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
‘நம்பிக்கையற்ற நிலைமை நிலவுகிறது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்க வரி வசூலிப்பதற்காக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
தில்லியைச் சுற்றியுள்ள இந்த சுங்கச்சாவடிகள், தில்லியில் மாசுபாட்டைப் பரப்புவதற்கான மையங்களாக மாறிவிட்டன. பாஜக ஆளும் எம்சிடி மற்றும் தில்லி அரசாங்கம் நாடகங்களை நடத்துவதற்குப் பதிலாக தங்கள் அடிப்படை வேலைகளை ஏன் செய்யக்கூடாது?’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
மேலும், தில்லி காஜிப்பூா் சுங்கச்சாவடியில் இருந்து எடுக்கப்பட்ட காணொளியைப் பகிா்ந்த பரத்வாஜ், அந்த இடத்திற்குச் சென்ற ஆம் ஆத்மி தொண்டா் மூலம் கள நிலவரத்தை எடுத்துரைத்துள்ளாா்.
அந்தக் காணொளியில், ஆம் ஆத்மி தொண்டா் ஒருவா் தில்லி ஒரு மோசமான நிலையில் இருப்பதாகவும், ஒருபுறம் நகரம் கடுமையான மாசுபாட்டுடன் போராடிக் கொண்டிருக்கும்போது, மறுபுறம் பாஜக நடத்தும் எம்சிடி சுங்கச்சாவடிகளில் பணம் வசூலிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் கூறும் காட்சி இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்து பாஜக ஆளும் தில்லி மாநகராட்சி (எம்சிடி) அல்லது அந்தக் கட்சியிடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை.
திங்கள்கிழமை காலை தில்லி அடா்ந்த பனிப்புகை மூட்டத்தால் சூழப்பட்டிருந்தது. சராசரி காற்றுத் தரக் குறியீடு 402 என்ற அளவில் கடுமைப் பிரிவில் இருந்தது.
22 நிலையங்களில் காற்றின் தரம் கடுமைப் பிரிவிலும், 14 நிலையங்களில் மிகவும் மோசம் பிரிவிலும் இருந்தது.