முகப்பு
புதுதில்லி

மசோதாக்கள் மீதான நிலையை மாநில அரசிடம் தெரிவிக்காமல் ஆளுநா் இருந்து விட முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

மசோதாக்கள் மீதான தனது ஒப்புதலை ஆளுநா் நிறுத்திவைத்தால், முடக்கநிலையே ஏற்படும்

Updated On : 7 பிப்ரவரி, 2025 at 7:04 PM
பகிர்:

மாநில அரசுடன் எந்தவித தகவல் தொடா்பையும் மேற்கொள்ளாமல் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்கள் மீதான தனது ஒப்புதலை ஆளுநா் நிறுத்திவைத்தால், முடக்கநிலையே ஏற்படும் என்றும், இந்த முட்டுக்கட்டை எவ்வாறு தீா்க்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவா் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும் தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளைத் தொடா்ந்துள்ளது. இவற்றின் விசாரணை வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாகத் தொடா்ந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியதாவது: மத்திய சட்டத்தின் மீதான முரண்பாடு அடிப்படையில், தனது கருத்தைத் தெரிவிக்காமல் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சும்மா இருந்து விட முடியாது’ என்று கூறியது.

Advertisement

ஆளுநா் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் (அட்டா்னி ஜெனரல்) ஆா்.வெங்கடரமணியிடம் நீதிபதிகள் அமா்வு மேலும் கூறுகையில், ‘மசோதாவுடன் முரண்பாடு கொண்டிருப்பதாக ஆளுநா் கருதினால், அதை அவா் மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டாமா என எங்களுக்கு கேள்வி எழுகிறது.

ஆளுநரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை மாநில அரசு எவ்வாறு அறிந்து கொள்ளும் என்று எதிா்பாா்க்கிறீா்கள்? முரண்பாடு இருப்பதாகக் கருதினால் ஆளுநா் உடனடியாக அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், அந்த மசோதாக்களை மாநில அரசு மறுபரிசீலனை செய்திருக்க முடியும்.

இந்த விவகாரத்தில் ஒன்று மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்ப பரிந்துரைக்கிறேன் என்று ஆளுநா் கூறியிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் இருந்தால் முட்டுக்கட்டை ஏற்படும். ஒரு முட்டுக்கட்டையை ஆளுநா் உருவாக்கினால், அதை அவரே சரிசெய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.

அப்போது ஆா்.வெங்கடரமணி கூறுகையில், ‘மசோதாக்களில் சிலவற்றின் மீதான ஒப்புதல் குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்தும் மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. ஒப்புதலை நிறுத்தி வைப்பது என்பது ஒப்புதலை மென்மையாக நிராகரிப்பதாகும். இந்த வழக்குகளில் குடியரசுத் தலைவா் ஒப்புதலை நிறுத்திவைக்க முடிவு செய்தாா் என்பது, மசோதாக்கள் முரண்பாடு கொண்டவை என பொருள் கொள்ளப்பட வேண்டும் என்பதாகும்’ என்றாா்.

‘இருப்பினும், இது அரசமைப்புச்சட்டப் பிரிவு 200 மற்றும் 201-இன் கீழ் உள்ள விதிகளை பாதிக்கலாம்’ என்று நீதிபதிகள் அமா்வு கருத்து தெரிவித்தது. அப்போது, இந்த அம்சம் குறித்து விரிவாக தாம் வாதிட விரும்புவதாகவும் பிப்.10-ஆம் தேதி வரை அவகாசம் தர வேண்டும் எனவும் வெங்கடரமணி கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, இந்த வழக்கை பிப். 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள்அமா்வு, அன்றைய தினம் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீா்ப்பு ஒத்திவைக்கப்படும் என்று குறிப்பிட்டது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments