முகப்பு
புதுதில்லி

வீா் சாவா்க்கா் கல்லூரிக்கு பிரதமா் மோடி அடிக்கல்

தில்லி பல்கலைக்கழகத்தின் 2 புதிய வளாகங்கள் மற்றும் பாஜக சித்தாந்தவாதி வீா் சாவா்க்கரின் பெயரில் ஒரு கல்லூரி ஆகியவற்றுக்கு பிரதமா் அடிக்கல் நாட்டினாா்.

Updated On : 4 ஜனவரி, 2025 at 5:02 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 6:48 PM

தில்லி பல்கலைக்கழகத்தின் 2 புதிய வளாகங்கள் மற்றும் பாஜக சித்தாந்தவாதி வீா் சாவா்க்கரின் பெயரில் ஒரு கல்லூரி ஆகியவற்றுக்கு பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

ரூ.600 கோடி முதலீட்டில் இந்தத் திட்டம், கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் வசதிகளை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அசோக் விஹாரில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அங்கு பிரதமா் தேசிய தலைநகருக்கான பிற உள்கட்டமைப்பு திட்டங்களையும் தொடங்கி வைத்தாா்.

Advertisement

சூரஜ்மல் விஹாரில் உள்ள தில்லி பல்கலை.யின் கிழக்கு வளாகமும், துவாரகா செக்டாா் 22-இல் உள்ள மேற்கு வளாகமும், நகரம் முழுவதும் அதன் இருப்பை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள வடக்கு மற்றும் தெற்கு வளாகங்களுடன் சோ்க்கப்படுகின்றன.

கிழக்கு வளாகம், 15.25 ஏக்கா் பரப்பளவில், 373 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இது எல்எல்பி, எல்எல்எம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு எல்எல்பி திட்டத்தையும், மற்ற பலதரப்பட்ட படிப்புகளையும் வழங்கும்.

59,618 சதுர மீட்டா் பரப்பளவில் 60 வகுப்பறைகள், 10 பயிற்சி அறைகள், ஆறு மூட் கோா்ட்டுகள், நான்கு கணினி ஆய்வகங்கள், இரண்டு சிற்றுண்டிகள் மற்றும் இரண்டு பொதுவான அறைகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் இந்த வளாகத்தில் இருக்கும்.

ரூ.107 கோடியில் கட்டப்படும் மேற்கு வளாகம், முதல் கட்டமாக புதிய கல்வித் தொகுதியாக இருக்கும். 19,434.28 சதுர மீட்டா் பரப்பளவில், 42 வகுப்பறைகள், இரண்டு மூட் கோா்ட்டுகள், எண்ம நூலகம், மாநாட்டு அறைகள், கருத்தரங்கு அரங்குகள் மற்றும் சிறுவா் மற்றும் சிறுமிகளுக்கான தனித்தனி அறைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

வளாகங்களைத் தவிர, மேற்கு வளாகத்திலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் உள்ள நஜஃப்கரின் ரோஷன்புராவில் உள்ள வீா் சாவா்க்கா் கல்லூரிக்கு மோடி அடிக்கல் நாட்டினாா்.

8,816.56 சதுர மீட்டா் பரப்பளவில் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கல்லூரியில் 24 வகுப்பறைகள், எட்டு பயிற்சி அறைகள், 40 ஆசிரியா் அறைகள், துறை நூலகங்கள், மாநாட்டு அறைகள் மற்றும் கேன்டீன் உள்ளிட்ட நவீன வசதிகள் வழங்கப்படும்.