பெண்கள், திருநங்கை பயணிகளுக்கான ஸ்மாா்ட் போக்குவரத்து அட்டை: நிறுவனங்களுக்கு டிடிசி அழைப்பு
கட்டண வசூலிப்பை டிஜிட்டல் மயமாக்கவும் பெண்கள், திருநங்கை பயணிகளுக்கு வெளிப்படையான பயணச் சலுகைகளை உறுதிப்படுத்தவும் ஸ்மாா்ட் காா்டுகளை வெளியிட தில்லி போக்குவரத்து நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
புது தில்லி: கட்டண வசூலிப்பை டிஜிட்டல் மயமாக்கவும் பெண்கள், திருநங்கை பயணிகளுக்கு வெளிப்படையான பயணச் சலுகைகளை உறுதிப்படுத்தவும் ஒரு நடவடிக்கையாக தேசிய பொது போக்குவரத்து காா்டு (என்சிஎம்சி) கட்டமைப்பின் கீழ் ஸ்மாா்ட் காா்டுகளை வெளியிட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ஆா்வத்தை வெளிப்படுத்த (இஓஐ) தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடா்பாக டிடிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தலைநகரில் உள்ள அனைத்து பொதுப் போக்குவரத்திலும் பயன்படுத்தக்கூடிய ஸ்மாா்ட் அட்டைகள் மூலம் பயணத்தை எளிதாக்குவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட வங்கிகள் பொறுப்பாகும்.
இந்த அட்டைகள் தற்போது பேருந்துகளில் இலவசப் பயணத்திற்காக பெண்களுக்கு வழங்கப்படும் இளஞ்சிவப்பு நிற பயணச்சீட்டு முறைக்கு மாற்றாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி முதல்வா் ரேகா குப்தா தனது பட்ஜெட் தின உரையின் போது, பெண்களுக்கு காகித அடிப்படையிலான இளஞ்சிவப்பு டிக்கெட்டுகளை வழங்கும் முந்தைய நடைமுறையை விமா்சித்திருந்தாா். இது முந்தைய நிா்வாகத்தின் கீழ் ஊழலுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருந்தது என்றும் குற்றம்சாட்டினாா்.
புதிய அமைப்புமுறையானது பெண்கள் காகித அடிப்படையிலான பயணச்சீட்டுகளை நம்பாமல் பயணிக்க அனுமதிக்கும் என்றும், அதற்கு பதிலாக அவா்களின் அடையாளத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பான டிஜிட்டல் காா்டுகள் பயன்படுத்தப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.