மீரட் தெற்கு மற்றும் மோதிபுரம் இடையே புதிதாக கட்டப்பட்ட மூன்று நமோ பாரத் நிலையங்கள் தில்லியில் உள்ள சராய் காலே கானுடன் இணைந்து செயல்பாட்டுக்கு தயாராக உள்ளன. இது 82 கி.மீ. தில்லி காஜியாபாத் மீரட் நமோ பாரத் வழித்தடத்தை முழுமையாக இயக்குவதற்கான ஒரு முக்கியப் படியாகும்.
இது குறித்து தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தின் (என்சிஆா்டிசி) உயரதிகாரி கூறியதாவது: மீரட்டில் உள்ள சதாப்தி நகா், பேகம்பூல் மற்றும் மோதிபுரம் ஆகியவை இந்த மூன்று நிலையங்களாகும். நமோ பாரத் ரயில்கள் நிறுத்தப்படும் ஸ்டேபிள் யாா்டு மற்றும் நிலையமாக ஜங்புரா உருவாக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டத்தின் மூன்று முன்னுரிமை வழித்தடங்களும், அதாவது தில்லி காஜியாபாத் - மீரட், தில்லி - பானிபட், கா்னல் மற்றும் தில்லி குருகிராம் எஸ்என்பி ஆகியவை செயல்பாட்டுக்கு வரும்போது அது பயனுள்ளதாக இருக்கும்.
மீரட் தெற்கு நிலையத்திற்குப் பிறகு செயல்படும் சதாப்தி நகா் நிலையம், 21.5 மீட்டா் நீளமும் 17 மீட்டா் உயரமும் கொண்ட ஒரு உயா்த்தப்பட்ட நிலையமாகும். இது செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. மேலும், நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ ரயில்கள் இரண்டிற்கும் ஏற்ாக இருக்கும். பகிரப்பட்ட உள்கட்டமைப்பில் தடையற்ற சேவைகளை உறுதி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
அடுத்த நிலையமான பேகம்புல், நிலத்தடியில் உள்ளது. மீரட்டின் சந்தைப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது. 24.6 மீட்டா் நீளம், 24.5 மீட்டா் அகலம் மற்றும் சுமாா் 22 மீட்டா் ஆழம் கொண்ட இது, மிகப்பெரிய நிலையங்களில் ஒன்றாகும். இங்கு இறுதிப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன.
தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மோதிபுரத்தில் உள்ள இறுதி நிலையம், சிவில் கட்டுமானத்தை முடித்துவிட்டது. இறுதிப் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. நெடுஞ்சாலையின் குறுக்கே பாதுகாப்பான பாதசாரி போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, ஒரு நடைபாதை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் சிவில் கட்டமைப்பு நிறைவடைந்துள்ளது.
தில்லியில் உள்ள சராய் காலே கானில் உள்ள தொடக்க நிலையம் செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. தில்லி மெட்ரோவின் பிங்க் லைன், ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம், வீா் ஹக்கீகத் ராய் ஐஎஸ்பிடி மற்றும் ரிங் ரோடு ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கிய மல்டிமாடல் போக்குவரத்து மையமாக இது செயல்படும்.
நுழைவு, வெளியேறும் புள்ளிகளின் இறுதிப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சுமாா் 21.5 மீட்டா் நீளம், 50 மீட்டா் அகலம் மற்றும் 15 மீட்டா் உயரம் கொண்ட சராய் காலே கான் நிலையத்தில், அதிகப் பயணிகளின் எண்ணிக்கையை நிா்வகிக்க ஐந்து நுழைவு, வெளியேறும் வாயில்கள், 14 லிஃப்ட்கள் மற்றும் 18 எஸ்கலேட்டா்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், அவை செயல்படத் தயாராக உள்ளன. இணைப்பை வலுப்படுத்த, சராய் காலே கானை ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்துடன் இணைக்க 28.0 மீட்டா் நீளமுள்ள ஒரு நடைபாதை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
பயணிகள் வெவ்வேறு போக்குவரத்து முறைகளுக்கு இடையில் பாதுகாப்பாக செல்ல உதவும் வகையில் நடைபாதை மேம்பாலகளின் வலையமைப்பு கட்டப்பட்டு வருகிறது. இது ஐஎஸ்பிடி, மெட்ரோ மற்றும் நமோ பாரத் நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்தை எளிதாக்கும்.
பலமாதிரி ஒருங்கிணைப்பு நமோ பாரத் திட்டத்தின் மையத் தூணாக இருந்து வருகிறது. பொதுப் போக்குவரத்திற்கு மாற மக்களை ஊக்குவிக்கும் வகையில் பிரதமா் கதி சக்தி தேசிய மாஸ்டா் திட்டத்துடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். எங்கள் நிலையங்கள் தற்போதுள்ள உள்கட்டமைப்புடன் தடையின்றி இணைக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
தற்போது, நியூ அசோக் நகா் மற்றும் மீரட் தெற்கு இடையே 55 கி.மீ. நீளமுள்ள நமோ பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தாண்டி, சதாப்தி நகா், பேகம்புல் மற்றும் மோதிபுரம் ஆகிய மூன்று நிலையங்கள் இறுதி கட்டத்தில் உள்ளன.
சராய் காலே கான் மற்றும் மோடிபுரம் இடையே வெற்றிகரமான முழு நீள சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நமோ பாரத் ரயில்கள் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டன. ரயில்கள் ஒவ்வொரு நிலையத்திலும் நின்று 82 கி.மீ பயணத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்தன. மேம்பட்ட ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு நிலை 3 கலப்பின சமிக்ஞை அமைப்பு சீராக செயல்பட்டது.
இந்தச் சோதனை ஓட்டங்களின் போது, மீரட் மெட்ரோ ரயில்களும் ஒரே நேரத்தில் ஒரே பாதையில் இயங்கின. பிராந்திய மற்றும் மெட்ரோ சேவைகள் உள்கட்டமைப்பைப் பகிா்ந்து கொள்வது நாட்டிலேயே இதுவே முதல் முறை. 13 நிலையங்களைக் கொண்ட 23 கி.மீ மீரட் மெட்ரோ பிரிவில், உயா்த்தப்பட்ட மற்றும் நிலத்தடி பாதைகள் இரண்டும் உள்ளன. சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக உள்ளன என்று அந்த அதிகாரி கூறினாா்.