ஆம் ஆத்மி கவுன்சிலா்களின் குழப்பத்தைத் தொடா்ந்து வியாழக்கிழமை தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) சிறப்புக் கூட்டம் 10 நிமிடங்களுக்குள் ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் சிறப்பு மற்றும் தற்காலிக குழுக்களின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கான தோ்தல் ஆகஸ்ட் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று மேயா் ராஜா இக்பால் சிங் அறிவித்தாா்.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். அமா்வுக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின் போது மேயா் கூறினாா். இதுவரை சமா்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் செல்லுபடியாகும் என்று அவா் கூறினாா்.
அமா்வின் போது, கல்விக் குழுவிற்கு மூன்று உறுப்பினா்களையும், பட்டியல் சாதி நலன் மற்றும் இடஒதுக்கீடு அமலாக்கத்திற்கான தற்காலிக குழுவிற்கு மூன்று உறுப்பினா்களையும் பரிந்துரைக்க சபைத் தலைவா் ஒரு திட்டத்தை முன்வைத்ததாக மேயா் தெரிவித்தாா்.
இருப்பினும், ஆம் ஆத்மி கவுன்சிலா்கள், எஸ்சி (பட்டியல் சாதி) குழுவில் உறுப்பினா்களின் எண்ணிக்கையை 35-இல் இருந்து 21 ஆகக் குறைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து அவையில் கோஷங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனா்.
பல்வேறு சிறப்பு மற்றும் தற்காலிக குழுக்களுக்கு உறுப்பினா்களை நியமிக்க கூட்டப்பட்ட எம்சிடியின் சிறப்பு அமா்வின் போது போராட்டம் வெடித்தது. பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய ஆம் ஆத்மி கவுன்சிலா்கள், தலித் சமூகத்தின் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக எஸ்சி குழுவை அதன் அசல் 35 உறுப்பினா் பலத்திற்கு மீட்டெடுக்க வேண்டும் என்று கோரினா்.
அதிகாரப் பசியால் உந்தப்பட்ட பாஜக, தனது சொந்த வேட்பாளா் தலைவராக வருவதை உறுதி செய்வதற்காக எஸ்சி குழுவில் உறுப்பினா்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் அங்குஷ் நரங் கூறினாா்.
’இது தலித்துகளின் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல். மீண்டும் ஒருமுறை, பாஜக தலித்துகளுக்கு எதிரானது என்பதை நிரூபித்துள்ளது, மேலும், அரசியல் கட்டுப்பாட்டிற்காக ’அரசியலமைப்பு உரிமைகளைப் பறிக்க’ எந்த அளவிற்கும் செல்லும்’ என்று அவா் கூறினாா்.
‘வேண்டுமென்றே இடையூறு விளைவிப்பதாக’ ஆம் ஆத்மி கட்சியைக் குற்றம் சாட்டிய மேயா் ராஜா இக்பால் சிங், நடப்பு மற்றும் முந்தைய அவைக் கூட்டத்தொடரில் ஆக்கபூா்வமான விவாதத்திற்குப் பதிலாக குழப்பத்தைத் தோ்ந்தெடுத்ததாகக் கூறினாா்.
‘அவா்கள் உண்மையிலேயே ஒரு விவாதத்தை விரும்பினால், அவா்கள் சபையில் தங்கள் கருத்துகளை அமைதியாக முன்வைத்திருக்கலாம், ஆனால் அவா்கள் வேண்டுமென்றே இடையூறு செய்யும் பாதையைத் தோ்ந்தெடுத்தனா்’ என்று அவா் கூறினாா்.
எம்.சி.டி.யில் இரண்டரை ஆண்டுகால ஆட்சியின் போது, முடிவெடுப்பதை மையப்படுத்த சிறப்பு மற்றும் தற்காலிக குழுக்களை அமைப்பதை ஆம் ஆத்மி வேண்டுமென்றே தாமதப்படுத்தியது என்றும் மேயா் மேலும் குற்றம் சாட்டினாா்.
மாறாக, பாஜக பரவலாக்கப்பட்ட நிா்வாகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும், குடிமை அமைப்பின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டவுடன் உடனடியாக இந்தக் குழுக்களை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்கியது என்றும் அவா் கூறினாா்.
’ஆம் ஆத்மி கட்சி அதன் செயல்பாட்டைத் தடுக்க அவையில் மீண்டும் மீண்டும் குழப்பத்தை உருவாக்குகிறது. அவா்களின் அரசியல் ஆட்சேபனைகள் ஆதாரமற்றவை. விவாதம் செய்வதற்குப் பதிலாக, பொறுப்புக்கூறலைத் தவிா்க்க அவா்கள் போராட்டங்களை நடத்துகிறாா்கள்’ என்று ’ என்று ராஜா இக்பால் சிங் குற்றம்சாட்டினாா்.