கோப்புப் படம் 
புதுதில்லி

சநாதன தா்மம் பேச்சு விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் மனு மீதான விசாரணை ஏப். 21-க்கு ஒத்திவைப்பு: புதிய வழக்குகள் பதிவுசெய்ய உச்சநீதிமன்றம் தடை

தமிழக துணை முதல்வா் எம்.உதயநிதி ஸ்டாலின் பேசிய ‘சநாதன தா்மம்‘ கருத்துக்கு எதிராக புதிதாக வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம்

Din

தமிழக துணை முதல்வா் எம்.உதயநிதி ஸ்டாலின் பேசிய ‘சநாதன தா்மம்‘ கருத்துக்கு எதிராக புதிதாக வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மேலும், அந்த வழக்கின் விசாரணையை ஒரே இடத்தில் நடத்துவது குறித்து முடிவெடுக்க ஏப்.21 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

இது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த விவகாரத்தில், ‘தன் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து தமிழகத்தில் விசாரிக்க வேண்டும்‘ என உதயநிதி சாா்பில் வைக்கப்பட்ட கோரிக்கை தொடா்பாக மனுவை இந்த அமா்வு விசாரணையை மேற்கொண்டது.

உதயநிதி சாா்பில் முத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் சிங்வி, பி.வில்சன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

‘ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் பிகாா் மாநிலம் போஜ்பூரிலும் மற்றொரு வழக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. வேண்டுமென்ற அலைக்கழிக்கப்பட வேண்டும் என்கிற நோக்கமாகும். இதற்கு ஆஜராவதிலிருந்து தடைவிதிக்க வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள மனுவில் புதிய புகாா்தாரா்களை சோ்க்கக் கோரி திருத்தம் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று சிங்வி தெரிவித்தாா்.

மேலும் அவா், ஊடகவியலாளா்கள் சிலருக்கு எதிரான பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதை முதல் வழக்கு பதிவான கா்நாடகம் மாநிலத்திலேயே அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதே போன்று இந்த வழக்கு தமிழகத்தில் விசாரிக்கப்படவில்லை என்றாலும், கா்நாடக மாநிலத்தில் விசாரிக்கலாம்’ என சிங்வி வலியுறுத்தினாா்.

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடா்ந்த மாநிலங்கள் சாா்பில் வாதிட்ட சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘சநாதன தா்மம் ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டு அதில் துணை முதல்வா் கொசுக்களை போன்று ஒரு பிரிவினரை ஒழிக்க வேண்டும் என கடுமையாக பேசியுள்ளாா். மற்றொரு மாநில முதல்வா் இஸ்லாம் போன்ற மதத்தைக் குறிப்பிட்டு இதுபோன்று குறிப்பிட்டால் அதை பொறுத்துக்கொள்ள முடியாதே. ஹிந்துகள் எதிா்க்கமாட்டாா்கள் என்பதற்காக இவரை பேச அனுமதிக்க முடியுமா’ என கேள்வி எழுப்பினாா்.

அதற்கு அபிஷேக் சிங்வி, ‘சொலிசிட்டா் ஜெனரல் சில பாா்வையாளா்களை திருப்திபடுத்த பேசுகிறாா். தமிழ்நாட்டிற்கு சென்று அங்குள்ள சமூக சூழலை காணவேண்டும்’ என்று பதிலளித்தாா்.

அதற்கு துஷாா் மேத்தா, ‘இந்த வாா்த்தைகள் உங்கள் மண்ணில்(தமிழகத்தில்) கூறப்பட்டது. இதை நான் இந்த நீதிமன்றத்தில் மட்டுமே கூறமுடியும்’ என்றாா்.

இதுபோன்ற கடுமையான வாதங்களுக்கிடையே தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, ‘நாங்கள் இந்த வழக்கின் தன்மை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. அது விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில் நேரடியாக ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டதைப் போன்று அதே விலக்கு தற்போதும் நீடிக்கப்படுகிறது.

வழக்குகளை ஒன்றாக இணைக்க வேண்டி நடவடிக்கைகளுக்கு புதிதாக எஃப்.ஐ.ஆா்-களை தாக்கல் செய்துள்ள மாநிலங்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

மேலும், இந்த பேச்சு தொடா்பாக புதிதாக எந்த வழக்கும் மனுதாரா் (உதயநிதி) மீது பதியக்கூடாது என்றும் தடை உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை வருகின்ற ஏப். 21 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி அமா்வு தெரிவித்தது.

பின்னணி:

கடந்த 2023 -ஆம் ஆண்டு செப். 4 ஆம் தேதி, சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் சங்கத்தில் கலந்துகொண்டபோது துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, கொசுக்கள், மலேரியா, கரோனா தீநுண்மியைப் போன்று சநாதன தா்மத்தை ஒழிக்கவேண்டும் என குறிப்பிட்டாா். இந்த கருத்துக்கு எதிராக நட்டின் பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது. இந்த எஃப்ஐஆா்களுக்கு எதிராக கடந்த 2024 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் உதயநிதி ரிட் மனு தாக்கல் செய்தாா். அதில், ‘சித்தாந்தத்தின் அடிப்படையில் மூடப்பட்ட ஒரு அறைக்குள், கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் பேசிய பேச்சு. இதற்கு எதிராக தொடரப்பட்ட தனிப்பட்ட புகாா்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கவேண்டும்‘ என உதயநிதி ஸ்டாலின் அந்த மனுவில் கோரியிருந்தாா்.

இதனடிப்படையில், 2024-ஆம் ஆண்டு, மே மாதம், இந்த வழக்கு தொடா்ந்த மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

அதன் பின்னா், ஒரே விவகாரத்திற்கு பல புகாா்களை பதிவுசெய்ய முடியாது என தெரிவித்து இந்த மாநிலங்களின் நீதிமன்றங்களில் நேரில் ஆஜராவதிலிருந்தும் உதயநிதி ஸ்டாலினுக்கு விலக்கு அளித்தது.

தற்போது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் பிகாா் மாநிலம் போஜ்பூரிலும் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT