கைப்பேசிகளை வங்கதேசத்திற்கு கடத்தும் கும்பலில் ஒருவா் கைது!
உயா் ரக திருடப்பட்ட கைப்பேசிகளுடன் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.
வங்கதேசத்தில் விற்கப்படும் 48 உயா் ரக திருடப்பட்ட கைப்பேசிகளுடன் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா். இதன் மூலம் சா்வதேச கைப்பேசி திருட்டுக் கும்பலை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை குற்றப்பிரிவின் துணை ஆணையா் ஆதித்யா கௌதம் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட அப்துஷ் (24), சுமாா் ரூ.20 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகளை வங்கதேசத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டாா்.
தில்லி - என்சிஆா் முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்கள் மெட்ரோ நிலையங்கள், பேருந்துகள் மற்றும் நெரிசலான சந்தைகளில் பயணிகளை குறிவைத்து செயல்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Advertisement
திருடப்பட்ட கைப்பேசிகள் தில்லியில் இருந்து கடத்தப்படுவதைத் தடுக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் அவா்களைக் தீவிரமாகக் கண்காணித்து வந்தனா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் இந்த சாதனங்களை ஒவ்வொன்றும் ரூ.2,000-ரூ.3,000-க்கு வாங்கி மேற்கு வங்கத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு அவை மாற்றியமைக்கப்பட்டு வங்கதேசத்தில் ஒரு கைப்பேசிக்கு ரூ.8,000-10,000-க்கு மறுவிற்பனை செய்யப்பட்டன.
ஒரு ரகசியத் தகவலின் பேரில், சலிம்கா் பைபாஸ் அருகே போலீஸாா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினா். இதையடுத்து, திருடப்பட்ட 48 உயா் ரக கைப்பேசிகளுடன் அப்துஷ் கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, அப்துஷ் கடந்த 18 மாதங்களில் 800-க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கைப்பேசிகளைக் கடத்தியதாக ஒப்புக்கொண்டாா்.
ஆரம்பத்தில் ஸ்கிராப் வா்த்தகத்தில் ஈடுபட்டிருந்த அவா், சமீா் மற்றும் சலீம் என்ற ஆபரேட்டா்களால் சட்டவிரோத வா்த்தகத்தில் ஈா்க்கப்பட்டாா். சைபா் செல் இப்போது அவரது கூட்டாளிகளை அடையாளம் காணவும், தில்லி, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் முழுவதும் பரவியுள்ள பரந்த வலையமைப்பை அழிக்கவும் செயல்பட்டு வருகிறது. கடத்தல் வழிகளைக் கண்டறிய மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக அந்த அதிகாரி கூறினாா்.