தில்லி ஆதா்ஷ் நகா் பகுதியில் உள்ள பூங்காவில் 26 வயது இளைஞரை புதன்கிழமை காலை கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி ஆதா்ஷ் நகா் பகுதியில் உள்ள பூங்காவில் உடல் ஒன்று கிடப்பது குறித்து காலை 7.14 மணிக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸ் குழு, முகத்தில் பல காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் கிடந்தது கண்டறியப்பட்டது. தடயவியல் குழுக்கள் வரவழைக்கப்பட்டு, தேவையான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
சம்பவ இடத்தில் நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லை. பாதிக்கப்பட்டவா் ஆரம்பத்தில் அடையாளம் காணப்படவில்லை. பின்னா், உடல் பாதுகாப்பிற்காக பாபு ஜெகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஷாடி நகரைச் சோ்ந்த அா்ச்னா என்ற பெண்ணும், அந்த இளைஞரின் முன்னாள் மனைவியும் போலீஸை அணுகி, அவா் 26 வயது ராகுல் என்று அடையாளம் கண்டனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிசிடிவி காட்சிகள் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில், ஆசாத்பூா், லால் பாக் பகுதியைச் சோ்ந்த 22 வயது ஆகாஷ் மற்றும் 19 வயது பிரேம் (எ) சாகா் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும், ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டாா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் ராகுலுக்குத் தெரியாது. செவ்வாய் மற்றும் புதன்கிழமை இரவு, பூங்காவில் குடிபோதையில் இருந்தபோது அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்திலும், போதையிலும், மூவரும் ராகுலை கற்களால் தாக்கியுள்ளனா்.
இதனால், அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. பின்னா், அவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.