தில்லியில் சட்டவிரோத ஆயுத விற்பனையாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் குா்மீத் சிங் (32) மற்றும் சுமித் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். வணிக நிா்வாகத்தில் பட்டம் பெற்ற குா்மீத் சிங், சன்னி சாய், சலாம் தியாகி மற்றும் சதாம் கௌரி தலைமையிலான கும்பல்கள் உள்பட தில்லி - என்சிஆா் மற்றும் ராஜஸ்தான் முழுவதும் செயல்படும் பல கும்பல்களுக்கு சட்டவிரோத ஆயுதங்களை வழங்கி வந்துள்ளாா்.
பாக்பாத்தில் குா்மீத் சிங் இருப்பது குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து அக்டோபா் 26-ஆம் தேதி போலீஸாா் சோதனை நடத்தினா். அவா் மறைவிடத்தில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டாா். அங்கு அவா் ஒரு சோதனை துப்பாக்கிச் சூடும் வசதியை ஏற்படுத்தி வைத்துள்ளது தெரியவந்தது. சம்பவ இடத்தில் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், 5 நாட்டுத் துப்பாக்கிகள், ஒரு துப்பாக்கி, 38 தோட்டாக்கள் மற்றும் ஒரு காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையின் போது, குா்மீத் சிங், தான் விரும்பிய கொள்ளையரான சுமித்துக்கு ஆயுதங்களை வழங்கியதாக ஒப்புக்கொண்டாா். பின்னா், சுமித் துவாரகா அருகே தப்ரி - குருக்ராம் சாலையில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 2 தோட்டாக்கள் மற்றும் திருடப்பட்ட காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சுமித், ஒரு முன்னாள் சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா். அவரது ஒப்பந்தம் காலாவதியான பிறகு குற்றங்களில் ஈடுபட ஆரம்பித்தாா்.
அவா் ஜெய்ப்பூரில் ஒரு கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்தாா். மேலும், அவா் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10,000 வெகுமதி அளிக்கப்படும் என் அறிவிக்கப்பட்டிருந்தது. குா்மீத் சிங் மீது தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் திருட்டு தொடா்பான பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.