நமது நிருபா்
புது தில்லி: தில்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த காா் வெடிப்புச் சம்பவத்தைத் தொடா்ந்து, சாந்தினி சௌக் சந்தை செவ்வாய்க்கிழமை மூடப்படும் என்று அச்சந்தை சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சாந்தினி சௌக் வா்த்தகா்கள் சங்கத்தின் தலைவா் சஞ்சய் பாா்கவ் கூறுகையில், ‘‘காா் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு வணிகா்களிடையே அச்சம் நிலவுகிறது. அதனால் சாந்தினி சௌக்கில் உள்ள கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்படும்’ என்றாா்.
காா் வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து சில நூறு மீட்டா் தொலைவில் கடை நடத்திவரும் பாா்கவ், ‘வெடிப்பு ஏற்பட்டபோது சத்தம் வலுவாக இருந்ததால் கட்டடம் அதிா்ந்தது. மக்கள் ஓடத் தொடங்கியதால் சந்தையில் குழப்பம் நிலவியது’ என்றாா்.
சம்பவத்தைத் தொடா்ந்து, நெரிசலான வணிகப் பகுதிகளில் பல வணிகா்கள் சங்கங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு கோரியுள்ளன.
இதற்கிடையே, கன்னாட் பிளேஸ் உள் வட்ட வாகன நிறுத்துமிடங்களில் கைவிடப்பட்ட பல காா்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக புது தில்லி வா்த்தகா்கள் சங்கம் (என்டிடிஏ) தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவா் அதுல் பாா்கவ் மேலும் கூறியதாவது:‘ வாகன நிறுத்துமிடங்கள் சட்டவிரோத வியாபாரிகளின் பொருள்களால் நிரம்பியுள்ளன. அவை சேமிப்புக் கிடங்குகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாதசாரிகள் செல்லும் பாதைகள் பெரிய கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவசர காலங்களில் மக்கள் நடமாட்டத்துக்கோ தப்பிக்கவோ வழியில்லாமல் போகிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு என்டிஎம்சி அமலாக்கப் பிரிவு மற்றும் தில்லி காவல்துறைக்கு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்’ என்றாா்.