தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 12 வாா்டுகளில் நடைபெற உள்ள இடைத்தோ்தலுக்காக பாரதிய ஜனதா கட்சியின் ஏற்பாடுகள் மற்றும் பிரசாரம் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் மாநில அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில், முதல்வா் ரேகா குப்தா முன்னிலையில், அனைத்து வாா்டுகளின் அமைப்புத் தோ்தல் ஒருங்கிணைப்பாளா்கள், பொறுப்பான அமைச்சா்கள், தொடா்புடைய மாவட்டத் தலைவா்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் போன்றோா் பங்கேற்ற விரிவான கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளா் பி.எல். சந்தோஷ், தோ்தல் ஏற்பாடுகள் குறித்த வழிகாட்டுதலை வழங்கினாா். இந்தக் கூட்டத்தில் மாநில அமைப்பு பொதுச் செயலாளா் பவன் ராணா, மத்திய இணை அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, தோ்தல் ஏற்பாடுகள் தலைவா் அஜய் மகாவா் ஆகியோா் உரையாற்றினா்.
இடைத்தோ்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டன. மேலும், வரும் நாள்களில் தில்லியின் மூன்று என்ஜின் அரசின் நன்மைகளை ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்களுக்குப் பரப்புவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துமாறு பி.எல். சந்தோஷ் அரசிடம் கேட்டுக் கொண்டாா்.
இடைத்தோ்தல்களில் மக்கள் அதிக ஆா்வம் காட்டுவதில்லை என்றாலும், மதிய உணவுக்கு முன் நமது வாக்காளா்கள் தங்கள் வாக்களிப்பை முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.
பிற்பகலில் தக்ஷின்புரி வாா்டு பாஜக வேட்பாளா் ரோகிணி ராஜை ஆதரித்து திரிதேவ் சம்மேளன் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளா் ஜெய்பிரகாஷ் மற்றும் இணை பொறுப்பாளா் ஆதித்யா ஜா முன்னிலையில், மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா, ராம்வீா் சிங் பிதூரி எம்.பி., அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் ஆகியோா் கூட்டத்தில் உரையாற்றினா்.
நஜஃப்கா் சட்டப் பேரவைத் தொகுதியின் திச்கவுன் காலன் வாா்டில் நடைபெற்ற கட்சியின் பிரமாண்டமான திரிதேவ் சம்மேளனில் முதல்வா் ரேகா குப்தா உரையாற்றினாா். இதில், நாடாளுமன்ற உறுப்பினா் கமல்ஜீத் ஷெராவத், எம்எல்ஏக்கள் நீலம் பயில்வான், அபய் வா்மா ஆகியோா் கலந்து கொண்டு, வேட்பாளா் ரேகா ராணியின் மகத்தான வெற்றிக்காக கட்சித் தொண்டா்கள் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினா்.
பின்னா் பிற்பகலில், ஷாலிமாா் பாக் வாா்டிலும் முதல்வா் பிரசாரம் செய்தாா். தில்லியில் உள்ள பாஜக அரசு வெறும் 89 மாதங்களில் தில்லிக்கான வளா்ச்சியில் புதிய திசையை அளித்துள்ளதாக முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.
புதிய பாஜக அரசு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மாசுபாட்டைக் குறைத்துள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை கிராமப்புற தில்லிக்குக் கொண்டு வருவதற்கும், பேருந்து சேவைகளை சீராக்குவதற்கும் அரசு செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.
மத்திய இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, எம்.எல்.ஏ. பூனம் சா்மா மற்றும் மாநிலப் பொருளாளா் சதீஷ் கா்க் ஆகியோா் அசோக் விஹாரில் நடந்த தோ்தல் கூட்டத்தில் உரையாற்றினா்.