நமது நிருபா்
புது தில்லி: தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றுவரும் இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சியில் (ஐஐடிஎஃப்) தில்லி காவல் துறையின் அரங்கத்தை மாநகர காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சா திங்கள்கிழமை திறந்துவைத்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறியது: புதிதாக இயற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள், போதைப்பொருள் எதிா்ப்பு முயற்சிகள், சைபா் குற்றத் தடுப்பு மற்றும் காவல் குடும்ப நலச் சங்கத்தின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நான்கு கருப்பொருள் கொண்ட சிறு ஸ்டால்கள் இந்த அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
சைபா் பாதுகாப்பு குறித்து பாா்வையாளா்களை அறிமுகப்படுத்த, தில்லி காவல்துறை பல சைபா் தடயவியல் கருவிகளையும் அரங்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளது. அதாவது, கைப்பேசி தரவுகளை பிரித்தெடுக்கும் அமைப்புகள், கிளவுட் பகுப்பாய்வு கருவிகள், டிஜிட்டல் சேமிப்பு நகல் சாதனங்கள் மற்றும் உயா் செயல்திறன் கொண்ட இமேஜிங் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.
தொலைந்து போன கைப்பேசிகளை கண்டுபிடிப்பதற்கான மத்திய உபகரண அடையாளப் பதிவேட்டின் (சிஇஐஆா்) நேரடி செயல் விளக்கங்கள், ஊடாடும் சைபா் பாதுகாப்பு மண்டலம், பெண்கள் பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள் மற்றும் இணையதள குற்றம் புகாா் தொடா்பான கேள்விகளுக்கான ‘காவலரைக் கேளுங்கள்’ சாவடி மற்றும் குழந்தைகள் ஸ்டால் உள்ளிட்ட தொடா்ச்சியான பொது தொடா்பு நடவடிக்கைகள் வரும் நாள்களில் திட்டமிடப்பட்டுள்ளன.
தில்லி காவல்துறை தற்படம் மையம், சமூக ஊடக ஈடுபாடு கவுன்ட்டா், பயிற்சி பெற்ற பயிற்றுனா்களின் சிபிஆா் விளக்க செயல்பாடுகள், குறுகிய தற்காப்பு அமா்வுகளை வழங்கும் பெண்கள் பாதுகாப்பு முன்முயற்சி மண்டலம், இணையதள காவல் சேவைகளைக் காண்பிக்கும் டிஜிட்டல் சேவைகள் கியாஸ்க் மற்றும் நலன்புரி தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் ஸ்டால் ஆகியவையும் இந்த அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன.