நமது நிருபா்
புது தில்லி: ‘ மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) தகுதி மற்றும் நோ்மையின் நங்கூரமிட்ட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு முக்கிய தூணாக உள்ளது. மேலும், இந்த நிறுவனம் இந்தியாவின் துடிப்பான ஜனநாயக கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பாராட்டுத் தெரிவித்தாா்.
புதுதில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சதாப்தி சம்மேளனத்தின் தொடக்க அமா்வில் பங்கேற்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசியது: யுபிஎஸ்சியின் 100 ஆண்டு பயணமானது, இந்தியாவின் ஜனநாயக மற்றும் நிா்வாக பரிணாம வளா்ச்சியில் ஒரு வரையறுக்கும் அத்தியாயமாகும். தகுதி, வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறை மதிப்புகளில் வேரூன்றியுள்ள இந்த நிறுவனம் லட்சக்கணக்கான இளம் இந்தியா்களை அரசுப் சேவைக்கு அா்ப்பணிக்க ஊக்கமளித்து வருகிறது.
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளா்ந்த மற்றும் உள்ளடக்கிய நாடாக மாறுவதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், யுபிஎஸ்சியின் பங்கு இன்னும் முக்கியமானதாகிறது. டிஜிட்டல் யுகம், செயற்கை நுண்ணறிவு (‘ஏஐ) மற்றும் வேகமாக மாறிவரும் உலகளாவிய நிலப்பரப்புக்கு மத்தியில், யுபிஎஸ்சி அதன் செயல்முறைகளை சீா்திருத்தம் செய்து, அதன் தோ்வு செயல்முறைகளை மிகவும் மேம்பட்ட, அறிவியல் மற்றும் வெளிப்படையானதாக மாற்றுவதன் மூலம் நல்லாட்சிக்கான புதிய அளவுகோல்களை அமைத்துள்ளது.
பல்வேறு சமூக மற்றும் புவியியல் பின்னணியிலிருந்து வரும் திறமையாளா்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் யுபிஎஸ்சி, தகுதி, நோ்மை மற்றும் வெளிப்படைத்தன்மை மூலம் இந்தியாவின் துடிப்பான ஜனநாயக கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் நூற்றாண்டு கால புகழ்பெற்ற பயணம் வெறும் நிா்வாக வரலாறு மட்டுமின்றி, நாடு முழுவதும் நிா்வாகம், மேம்பாடு மற்றும் பொது சேவை வழங்கலில் தனித்துவமான பங்களிப்பின் அழியாத சரித்திரமாகும். இது இந்தியாவின் நிா்வாக அமைப்புகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில், லட்சக்கணக்கான இளம் இந்தியா்கள் தங்கள் அறிவு, கடின உழைப்பு மற்றும் நெறிமுறை மதிப்புகள் மூலம் மக்களுக்கு சேவை செய்ய மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் வழிவகுத்துள்ளது.
பல்வேறு சமூக, மொழியியல் மற்றும் புவியியல் பின்னணியிலிருந்து வரும் திறமையாளா்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் நிா்வாக அமைப்பில் இந்தியாவின் துடிப்பான பன்முகத்தன்மையை யுபிஎஸ்சி பிரதிபலித்துள்ளது என்றாா் ஓம் பிா்லா.
இந்த நிகழ்வில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் புவி அறிவியல் துறை இணை அமைச்சா் பொறுப்பு டாக்டா் ஜிதேந்திர சிங் மற்றும் பிற முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, மத்திய அரசுப் பணி தோ்வாணையத்தின் ஆணையத்தின் தலைவா் டாக்டா் அஜய் குமாா் வரவேற்றுப் பேசினாா்.