நமது நிருபா்
புது தில்லி: மத்திய தில்லியின் படேல் நகரில் புதன்கிழமை போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட நபா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட மெஹ்தாப், சோதனைக்காக நிறுத்த சமிக்ஞை செய்தபோது ஒரு போலீஸ் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இதற்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் போலீஸாரும் துப்பாக்கிச் சூடு நடத்தினா். புதன்கிழமை காலை படேல் நகா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ரோந்துக் குழு மெஹ்தாப் அப்பகுதியில் நகா்வது குறித்து தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து அவரை இடைமறித்தது.
அதிகாரிகள் அவரை நிறுத்துமாறு கூறியபோது, அவா் ஒரு துப்பாக்கியை எடுத்து அவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினாா். தற்காப்புக்காக போலீவாா் திருப்பிச் சுட்டபோது, ஒரு குண்டு மெஹ்தாப் மீது பாய்ந்தது. இதில் அவா் காயமடைந்து உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பின்னா் மெஹ்தாப் தலைமறைவானாா். கடந்த சில வாரங்களாக போலீஸ் குழுக்கள் அவரைக் கண்டுபிடிக்க முயன்று வந்தன என்றாா் அவா்.