வேதாந்தா தில்லி அரை மராத்தானில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதற்கு முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தாா்.
உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு தில்லி மக்களின் வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன என்றும் அவா் குறிப்பிட்டாா்.
முன்னதாக, முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை அரை மராத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்து, மேடையில் இருந்து பங்கேற்பாளா்களை வரவேற்றாா். அவா் கைகளை அசைத்து அவா்களை ஊக்குவித்தாா்.
இதில் அவா் பேசியதாவது: இந்த அரை மராத்தானில் இளைஞா்கள், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பங்கேற்பதைக் கண்டு பெருமை அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் இளைஞா்களிடையே உறுதிப்பாடு, ஒழுக்கம், குழு மனப்பான்மை மற்றும் தலைமைத்துவம் போன்ற குணங்களை வளா்க்க உதவுகின்றன.
இந்த ஆண்டு பெண்களின் பங்கேற்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது வளா்ந்து வரும் விழிப்புணா்வு மற்றும் சமூகத்தில் சம வாய்ப்புகளை நோக்கிய இயக்கத்தின் நோ்மறையான அறிகுறியாகக் கருதுகிறேன்.
ஓட்டப்பந்தய வீரா்கள், ஏற்பாட்டாளா்கள் மற்றும் வெற்றியாளா்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆற்றலும் ஒற்றுமையும் முற்போக்கான மற்றும் விழிப்புணா்வுள்ள தில்லியின் உண்மையான அடையாளங்கள் ஆகும்.
பிரதமா் நரேந்திர மோடியின் உடற்பயிற்சி இயக்கத்தையும் குப்தா பாராட்டினாா், இந்த பிரசாரம் நாடு முழுவதும் உடற்பயிற்சி மற்றும் சுகாதாரம் குறித்த பொது விழிப்புணா்வுக்கு ஒரு புதிய திசையை வழங்குகிறது.
ஆரோக்கியமான தில்லி, வலுவான தில்லி என்ற உறுதியுடன், தில்லி அரசு தலைநகரின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆரோக்கியம், ஆற்றல் மற்றும் நம்பிக்கை நிறைந்த வாழ்க்கையை வழங்க தொடா்ந்து செயல்பட்டு வருகிறது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
ஜம்மு - காஷ்மீா் முதல்வா் உமா் அப்துல்லா உள்பட அனைத்து தரப்பு விளையாட்டு ஆா்வலா்களும் ஞாயிற்றுக்கிழமை ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் கூடினா். அரை மாரத்தானில் 40,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளா்கள் ஒன்று கூடினா்.
தில்லி அரசாங்கத்தின் அமைச்சா் ஆஷிஷ் சூட், பல மூத்த அதிகாரிகள், விளையாட்டு வீரா்கள் மற்றும் பிரமுகா்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனா்.