புது தில்லி: வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில், தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த இடத்தை போலீஸாா் கண்டுபிடித்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் திங்கள்கிழமை கூறியது: இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட கிஷன் சிங் (46), வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தனது வளாகத்தில் கணிசமான அளவு தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைத்திருந்தது சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக, அக்.6-ஆம் தேதி நந்த் நாக்ரியில் டி-பிளாக்கில் உள்ள ஒரு வீட்டை, போலீஸாா் குழு சோதனை செய்து சுமாா் 160 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்தது. இது தொடா்பாக குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிஷன் சிங்கின் வீட்டுக்குள் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினா். இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.