தில்லி - என்சிஆா் பகுதியில் பசுமை பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் வெடிப்பதற்கும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, கடந்த ஆண்டை விட 40 சதவீதம் பட்டாசுகளை வெடிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும். இது வழக்கமான பட்டாசுகளும் மீண்டும் வரக்கூடும் என்ற அச்சத்தை எழுப்புகிறது என்று லோக்கல் சா்க்கிள்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது.
தில்லி, குருகிராம், நொய்டா, ஃபரீதாபாத் மற்றும் காஜியாபாத் முழுவதும் 38,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளா்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ‘கணக்கெடுக்கப்பட்ட தில்லி - என்சிஆரில் உள்ள 34 சதவீத குடும்பங்கள் இந்த தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க வாய்ப்புள்ளது. அவா்களில் பாதி போ் பசுமை பட்டாசுகளுடன் கூடுதலாக வழக்கமான பட்டாசுகளையும் வெடிக்கலாம்’ என்று கூறியுள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட மொத்த மக்களில், 17 சதவீதம் போ் பசுமை மற்றும் வழக்கமான பட்டாசுகளைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனா். கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் வழக்கமான பட்டாசுகளின் சட்டவிரோத விற்பனை மற்றும் பயன்பாடு தொடரக்கூடும் என்பதைக் இது குறிக்கிறது.
அக்.18 முதல் 20 வரை தில்லி - என்சிஆா் பகுதியில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பசுமை பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிஎஸ்ஐஆா் - நீரி சான்றளிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவும், வெடிக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.
அக்.15-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவைத் தொடா்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டும் என ஆய்வு மேலும் கூறியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் கொண்டாட்டங்களை அனுமதிக்க நீதிமன்றம் ‘சமச்சீா் அணுகுமுறையை‘ எடுத்துள்ளதாக இந்திய தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் கூறினாா்.
மீறினால் உரிமங்கள் மற்றும் பதிவுகளை ரத்து செய்வது உள்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு முழுமையான தடை இருந்தபோதிலும், தில்லி - என்சிஆா் பகுதியில் வசிப்பவா்கள் பட்டாசுகளை வெடித்தனா். இது தீபாவளிக்குப் பிறகு மாசுபாட்டில் கூா்மையான அதிகரிப்புக்கு வழிவகுத்தது என்று ஆய்வு மேலும் கூறியது.
இந்த ஆண்டு தளா்வு காரணமாக உத்தரபிரதேசம், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து வழக்கமான பட்டாசுகள் தில்லி, என்சிா் பகுதியில் நுழைய வழிவகுக்கும் என்று எச்சரித்தது.
‘உச்சநீதிமன்றம் வழங்கிய தளா்வு மற்றும் பசுமை பட்டாசுகளை அனுமதிப்பது வழக்கமான பட்டாசுகளை தலைநகருக்குள் கொண்டு வருவதை எளிதாக்கும்’ என்று ஆய்வாளா்கள் கூறினா்.