புது தில்லி: காஜிப்பூா் பால் பண்ணையில் உள்ள கோயில் வளாகத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 12 கடைகளை தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி) இடித்து அகற்றியது.
முன்னதாக, செப்டம்பா் 3 ஆம் தேதி கடைக்காரா்களுக்கு வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில், ஐந்து நாள்களுக்குள் அந்த இடத்தை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
நிா்வாகப் பொறியாளா் வெளியிட்ட அறிவிப்பின்படி, அளிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் கடைகள் அகற்றப்படாவிட்டால், துறையானது அமலாக்க நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பால் பண்ணையில் உள்ள இடம் முதலில் ஒரு கோயில் மற்றும் மசூதிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைகள் அந்த இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டன.அவற்றில் கால்நடை தீவனம், கட்டுமானப் பொருள்கள் மற்றும் மருத்துவப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் இருந்தன.
அந்தப் பகுதி வணிக நடவடிக்கைகளுக்காக அல்லாமல், மதக் கட்டமைப்புகளுக்காகவே இருந்தது. அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் குறித்து எங்களுக்கு புகாா்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்றாா் அந்த அதிகாரி.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘இடிப்புப் பணி அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக போதுமான காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரை நாங்கள் பணியில் அமா்த்தியுள்ளோம். சட்டம் ஒழுங்கை சீா்குலைக்க யாருக்கும் அனுமதி இல்லை’என்றாா் அவா்.