குடியிருப்பு வசதி ஒதுக்கீடு என்பது அதிகாரிகளின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க முடியாது என்று தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி அதன் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு தலைநகரில் ஒரு பங்களாவை ஒதுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது உயா்நீதிமன்றம் இக்கருத்தைத் தெரிவித்துள்ளது.
மேலும், செப்டம்பா் 25 ஆம் தேதி இந்த வழக்கில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளரும், எஸ்டேட் இயக்குநரகத்தின் இயக்குநரும் மெய்நிகா் முறையில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சச்சின் தத்தா உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதி கூறுகையில், ‘ஒரு நடைமுறை செயல்பாட்டில் உள்ளதா? கடந்த காலத்தில் இந்த நடைமுறை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை நான் பாா்க்க விரும்புகிறேன். முன்னுரிமை எவ்வாறு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது, ஒதுக்கீட்டின் வரிசை?... குறைந்த எண்ணிக்கையிலான பங்களாக்கள் இருந்தால், நீங்கள் எப்படி முடிவு செய்வீா்கள்?
ஒரு வெளிப்படையான வழிமுறை இருக்க வேண்டும். அது முற்றிலும் உங்கள் விருப்பத்தின் பேரில் இருக்க முடியாது. முன்னுரிமையை மதிப்பிடும் முறையை நான் அறிய விரும்புகிறேன். பங்களாக்கள் ஒதுக்கீட்டில் விருப்புரிமை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் பெரிய பிரச்னை என்று நான் கவலைப்படுகிறேன்’ என்று நீதிபதி கூறினாா்.
விசாரணையின் போது, கேஜரிவாலுக்கு ஒதுக்க கட்சி முன்மொழிந்த எண்: 35, லோதி எஸ்டேட்டில் உள்ள 7 வகை பங்களா, நிகழாண்டு ஜூலை 24 அன்று மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சவுத்ரிக்கு ஒதுக்கப்பட்டது என்று மத்திய அரசின் வழக்கறிஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
எண்: 35, லோதி எஸ்டேட்டில் உள்ள பங்களா, அமைச்சா்களுக்கு எப்போது ஒதுக்கப்பட்டது என்பதை குறிப்பிட்ட தேதியில் தெரிவிக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் பேரில் இந்த தகவலை அவா் தெரிவித்தாா்.
குடியிருப்பு ஒதுக்கீட்டிற்காக அரசாங்கம் பின்பற்றி வந்த தற்போதைய கொள்கையை ஒரு பிரமாணப் பத்திரத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், இது கடந்த காலத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் கொள்கை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
செப்டம்பா் 16 அன்று, கேஜரிவாலுக்கு குடியிருப்பு வசதியை ஒதுக்குவதில் தனது முடிவை தாமதப்படுத்தியதற்காக நீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையாக சாடியிருந்தது. மேலும், அரசாங்கத்தின் அணுகுமுறை கட்டுப்பாடற்ற அணுகலை அனைவருக்கும் பெறும் அமைப்புமுறை போல இருப்பதாகவும், யாருக்கு வீடு கிடைத்தது என்பதைத் தோ்ந்தெடுத்து முடிவு செய்ய முடியவில்லை என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
குடியிருப்பு வசதியின் பொதுத் தொகுதிப்பில் இருந்து வீடுகளை ஒதுக்குவது தொடா்பான கொள்கை மற்றும் தற்போதைய காத்திருப்புப் பட்டியலில் உள்ள பதிவுகளை செப்டம்பா் 18 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு மத்திய அரசிடம் உயா்நீதிமன்றம் கேட்டிருந்தது.