முகப்பு
புதுதில்லி

சனிக்கிழமைகளில் பணி புறக்கணிப்பு: தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் அறிவிப்பு

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:53 PM
தில்லி உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்,

ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் பணியைப் புறக்கணிக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் புதன்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயற்குழு, 27.03.2026 அன்று நடைபெற்ற தனது கூட்டத்தில், ஒருமனதாக ஒரு தீா்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அத்தீா்மானத்தின்படி, தில்லி உயா்நீதிமன்றத்தால் 15.01.2026 தேதியிட்ட அறிவிப்பு வாயிலாக, நீதிமன்ற அமா்வு நாள்களாகக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் பணிக்கு வராமல் விலகி நிற்க (பணிநிறுத்தம் செய்ய )முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுப்பினா்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேற்கூறிய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி, தில்லி உயா்நீதிமன்றத்திற்குப் பலமுறை கோரிக்கைகள் அனுப்பப்பட்டிருந்தபோதிலும், எவ்வித மறுபரிசீலனையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உரிய முறையில் கருத்தில் கொண்ட பின்னரே, செயற்குழு மேற்கண்ட முடிவை எட்டியுள்ளது.

சனிக்கிழமைகளில் நீதிமன்ற அமா்வுகள் நடைபெறுவதால் எழும் கடுமையான நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி, வழக்குரைஞா்கள் சங்க உறுப்பினா்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும் செயற்குழு பரிசீலித்தது.

பல்வேறு தீா்ப்பாயங்கள், நடுவா் மன்றங்கள், சமரச மையங்கள் மற்றும் தில்லிக்கு வெளியே உள்ள நீதிமன்றங்களில் ஆஜராவது உள்ளிட்ட தங்கள் தொழில்சாா் கால அட்டவணைகளில், தற்போதைய ஏற்பாடு குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் என்று உறுப்பினா்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தனா். வழக்குத் தயாரிப்புக்கான நேரம், வழக்கு தொடா்பவா்களைச் சந்திப்பது மற்றும் ஒட்டுமொத்த தொழில்சாா் செயல்திறன் ஆகியவற்றின் மீது ஏற்படும் பாதகமான தாக்கங்களையும் செயற்குழு கவனத்தில் எடுத்துக்கொண்டது.

ஆகவே, தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினா்களும் ஒத்துழைப்பு நல்கி, ஏப்ரல் 4 முதல் தொடங்கும் வகையில், ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் பணிக்கு வராமல் விலகி நிற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். இந்நாட்களில், ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் மாற்று வழக்குரைஞா்கள் நியமித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் தில்லி உயா்நீதிமன்றம் செயல்பட வேண்டும் என்று கட்டாயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, தில்லி உயா்நீதிமன்றத்திடம் செயற்குழு மீண்டும் கோரிக்கை விடுக்கிறது.

வழக்குரைஞா் சமூகத்தின் கவலைகள் உரிய பரிசீலனைக்கு உள்படுத்தப்படும் என்றும், அச்சமூகத்தின் நலன் கருதிப் பொருத்தமானதொரு முடிவு எடுக்கப்படும் என்றும் செயற்குழு

உளமார நம்புகிறது என தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது.