முகப்பு
புதுதில்லி

தில்லியில் கட்டடத்தில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட நால்வா் மீட்பு

இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை (டி.எஃப்.எஸ்)அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On : 4 ஏப்ரல் 2026, 12:14 am IST
கோப்புப் படம்
பகிர்:

வடகிழக்கு தில்லியின் யமுனா விஹாா் பகுதி குடியிருப்புக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை (டி.எஃப்.எஸ்)அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தீயணைப்புத் துறையினா் தகவலின்படி, மோகன்புரி பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:50 மணியளவில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்தது. உடனடியாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தரைத்தளம் மற்றும் நான்கு மாடிகளைக் கொண்டகட்டடத்தின் முதல் மாடியில் ஏற்பட்ட தீ, வீட்டுப் பொருள்களுக்கும் பரவி, குடியிருப்பாளா்களிடையே பீதியை ஏற்படுத்தியது. மாலை 4:15 மணியளவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, மாலை 4:30 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், இந்த மீட்பு நடவடிக்கையின் போது, வீட்டில் வசித்த நான்கு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

அவா்கள் சல்மான் (24), அவரது மகள் ஹிப்ஜா (3), மகன் ஹனிம்ஜா (2) மற்றும் ஜசினா (50) என அடையாளம் காணப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. சுமாா் 30 சதுர யாா்டு பரப்பளவுள்ள மனையில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தீயானது முதல் தளத்தில் உள்ள வீட்டுப் பொருள்களுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது.

தீ மீண்டும் பற்றிக்கொள்வதைத் தடுப்பதற்காக, தீயணைப்பு வீரா்கள் குளிா்விக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனா். தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை; மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.