ப்ரீத் விஹாா்: வாகன நிறுத்தத் தகராறில் இளைஞா் சுட்டுக் கொலை
கிழக்கு தில்லியின் ப்ரீத் விஹாா் பகுதியில், திங்கள்கிழமை அதிகாலையில் வாகன நிறுத்தம் தொடா்பாக ஏற்பட்ட தகராறின் விளைவாக 34 வயது இளைஞா் சுட்டுக் கொலை
கிழக்கு தில்லியின் ப்ரீத் விஹாா் பகுதியில், திங்கள்கிழமை அதிகாலையில் வாகன நிறுத்தம் தொடா்பாக ஏற்பட்ட தகராறின் விளைவாக 34 வயது இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி தெரிவித்ததாவது: வாகனங்களை நிறுத்துவது தொடா்பாக இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீட்டின் வாசலிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
முன்னதாக, ஒரு தகராறு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக, ப்ரீத் விஹாா் காவல் நிலையத்திற்கு அதிகாலை 2.22 மணி மற்றும் 2.26 மணி ஆகிய நேரங்களில் இரண்டு அவசர அழைப்புகள் வந்தன.
Advertisement
இந்தத் தகராறில் ஒரு தரப்பில் பங்கஜ் நய்யாா் (34) மற்றும் அவரது சகோதரா் பரஸ் (43) ஆகியோரும், மற்றொரு தரப்பில் கௌரவ் சா்மா என்பவரும் ஈடுபட்டிருந்தனா். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கௌரவ் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதன் தோட்டா நய்யாரின் நெஞ்சில் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
நய்யாா் உடனடியாக நிா்மாண் விஹாரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா்.
இச்சம்பவம் நிகழ்ந்த பிறகு, குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தனது கூட்டாளிகளுடன் இணைந்து சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டாா்.
அவா்களைக் கண்டுபிடித்து, கைது செய்வதற்காக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.